“சமுதாயத்தை ஏமாற்றும் தேசிய மக்கள் சக்தியினர் ”
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தைத் தொடர்ந்தும் முன்கொண்டு சென்று அவர்களுடன் இணைந்து செயற்படவுள்ளதாகத் தேசிய மக்கள் சக்தி கூறுவதன் ஊடாக சமுதாயம் ஏமாற்றப்படுவதாக சோசலிச மக்கள் மன்றத்தின் ஜனாதிபதி வேட்பாளர் சட்டத்தரணி நுவான் போபகே தெரிவித்துள்ளார்.
மக்கள் போராட்ட முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும் அவர், “தேசிய மக்கள் சக்தியின் வர்த்தக சம்மேளனம் ஒன்று அண்மையில் இடம்பெற்றிருந்தது. சமூகவியல் பொருளாதார முறைமை மீறப்பட்டுள்ளமையினால் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்பாட்டைத் தொடர்ந்தும் முன்கொண்டு
செல்ல முடியாதென அவர்கள் முன்னர் குறிப்பிட்டனர்.
எனினும், சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டைத் தொடர்ந்தும் முன்கொண்டு செல்லவுள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தற்போது குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, சமுதாயத்தை ஏமாற்றும் செயற்பாடு இடம்பெற்றுள்ளது. எனவே, இந்த வேலைத்திட்டத்துக்கு எதிராகத் தேசிய மக்கள் சக்தியில் உள்ளவர்களை தங்களுடன் இணைந்து கொள்ளுமாறு கோருகிறோம்” என தெரிவித்துள்ளார்.