மதுபானம், குற்றவியல் தவறுகளற்றவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட வேண்டும் யாழில் மார்ச் 12 இயக்கம் வலியுறுத்தல்
குற்றவியல் தவறுகளற்ற, இலஞ்ச – ஊழலற்ற மதுபானம், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடாதவர்கள் பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட வேண்டும் என்று மார்ச் 12 இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
வேட்பாளர் தெரிவில் தூய்மையான அரசியலை பேணுமாறு வலியுறுத்தும் மார்ச் 12 இயக்கத்தின் செயல்பாட்டாளர்கள் 12 பேர் நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை யாழ். நகரில் பவ்ரல் அமைப்பின் கள இணைப்பாளர் சசீஸ்காந்தை சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் கொண்டிருக்க வேண்டிய தகைமைகள் பற்றி இங்கு விவாதிக்கப்பட்டது. பத்து ஆண்டுகளுக்கு முன்னரே, பாராளுமன்றத்தில் அச் சமயத்தில் அங்கம் வகித்த சகல அரசியல் கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவாறு, எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள சகல வேட்பாளர்களும் மார்ச் 12 இயக்கத்தின் எட்டு நியதிகளையும் பூர்த்தி செய்தவர்களாக இருத்தல் வேண்டும் என்பதை பவ்ரல் அமைப்பும் ஏனைய தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் கடுமையாக வலியுறுத்துவதன் மூலம் வேட்பாளர் தெரிவில் கட்சிகளும் குழுக்களும் தூய்மையான அரசியலை முன்னெடுக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என இங்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குறிப்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் – குற்றவியல் தவறுகளற்ற, இலஞ்ச ஊழலற்ற ஒருவராக இருத்தலுடன் மதுபானம், போதைப்பொருள் விற்பனை, விபசார விடுதி நடத்துதல் ஆகிய நடவடிக்கைகளில் சம்பந்தப்படாதவர்களாக இருக்க வேண்டும். அத்தோடு, அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எவ்வகையிலும் ஊக்கம் அளிப்பவர்களாய் ஒருபோதும் இருக்கக்கூடாது என்பது வலியுறுத்தப்பட வேண்டும்.
மேலும் அவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பவர்களாகவோ, நாட்டுக்கு குந்தகம் விளைவித்த நிதிசார் ஒப்பந்தங்களின் பங்கு தாரராகவோ இருந்திருக்கக் கூடாது. வேட்பாளர்கள் நியமனப்
பத்திரம் தாக்கல் செய்வதற்கு முன்பு அல்லது தாக்கல் செய்த பின்னர் தாம் மார்ச் 12 இயக்கத்தின் தீர்மானங்களை ஏற்றுக்கொள்வது பற்றி பகிரங்கமாக பொது மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
இந்தத் தீர்மானங்கள் குறித்து பொதுசன ஊடகங்கள் ஊடாக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகும் சகல அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுக்கு அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டது.