நீர் விநியோகம் உடனடியாக வழங்கப்பட வில்லையானால் வீதியில் இறங்கி போராடுவதற்கு மக்கள் தயார்

நீர் விநியோகம் உடனடியாக வழங்கப்பட வில்லையானால் வீதியில் இறங்கி போராடுவதற்கு மக்கள் தயார்

காரைதீவு மக்களுக்கு நீர் விநியோகம் கடந்த 10 நாட்களாக வழங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் உடனடியாக நீர் விநியோகம் வழங்கப்படவில்லை ஆனால் வீதியில் இறங்கி போராடுவதற்கு மக்கள் தயாராகி வருகிறார்கள்  என பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் நேற்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றும்போது,

அம்பாறை மாவட்டத்தில் அதிக அளவு மழை வீழ்ச்சியின் காரணமாக கரையோர பிரதேசங்கள் கூடுதலாக பாதிக்கப்பட்டது. அதில் தற்பொழுது வரை 10 நாட்களாக எந்தவித நீர் விநியோக மின்றி காரைதீவு மக்கள் மிகவும் படுமோசமான  இன்னலுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். இன்று காரைதீவு பிரதேசத்துக்கான நீர் வழங்கல் என்பது முற்றாக தடைப்பட்டு அப்பிரதேச மக்கள் அபாயகரமான சூழ்நிலையிலே கஷ்டப்படுகிறார்கள். நீர் விநியோக சபைக்கு சொந்தமான பிரதான நீர்க் குழாய் உடைந்ததன் காரணமாக இந்த நீர் வெட்டு இடம்பெற்றிருக்கிறது.

அதனை திருத்துகின்ற செயற்பாடானது மிகவும் மந்த கதியில் நடைபெறுகிறது. இது விடயத்தில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகள் அசமந்த போக்கிலே இருக்கிறார்கள். காரைதீவு மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் அற்ற நிலையில் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு உரிய அமைச்சர், அதிகாரிகள் உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும். இந்த இழுபறி நிலை தொடருமானால்    காரைதீவு மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்வதற்கு  தயாராக இருக்கிறார்கள் என்ற செய்தியையும் இந்த உயரிய சபையிலே கூறி வைக்க விரும்புகிறேன்.

அதேபோல் அம்பாறை மாவட்டத்தில் கூடுதலான நெற்செய்கை நிலங்கள் காணப்படுகின்ற நிலையில், விசேடமாக ஆலையடிவேம்பு, திருக்கோயில், நாவிதன்வெளி மற்றும் காரைதீவு போன்ற பிரதேசங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கூடுதலான வயல் நிலங்கள் சேதம் அடைந்திருக்கின்றன. இந்த விவசாயிகளுக்கு  மானிய உதவித் திட்டத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று இந்த சபையின் ஊடாக கேட்டுக் கொள்கிறேன்.

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் காணப்படுகின்ற முறையற்ற கால்வாயினால் தண்ணீர் வழிந்து ஓடுவது குறைவாக காணப்படுவதால் முறையான கால்வாய்  அமைக்கும் திட்டத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஏற்பட்ட மழையினால்  கூடுதலாக பாதிக்கப்பட்ட பிரதேசமாக அம்பாறை மாவட்டத்தில் ஆலையடி வேம்பு பிரதேசமே காணப்படுகின்றது. எனவே அதற்கான தீர்வுகளை நீங்கள் உடனடியாக செய்ய வேண்டும். விசேடமாக ஜனாதிபதி அவர்கள் மிகச் சிறப்பாக, திறமையாக செயல்பட கூடியவர்.

ஜனாதிபதி மற்றும் விடயத்திற்கு பொறுப்பான உரிய அமைச்சர்  அதிகாரிகளிடத்தில் பணிப்புரை வழங்கவில்லை என்பதுதான் இந்த இடத்தில் நாம் முக்கியமாக கூறிக்கொள்ள விரும்புகின்ற விடயமாகும். எனவே, இப் பிரச்சினை தீர்ப்பதற்கு பிரதம அமைச்சர், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுத்து குறித்து மக்களுக்கு தீர்வினை உடனடியாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் கூறினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )