கவர்ச்சிகரமான சுற்றுலா தலமாக இலங்கையை மாற்ற வேண்டும்
இலங்கையை சுற்றுலாப் பயணிகளின் கவரக்கூடிய இடமாக மாற்றுவதற்குத் தேவையான திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
“Clean Sri Lanka”(கிளீன் ஶ்ரீலங்கா) திட்டத்தை மீளமைப்பதன் ஊடாக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பான செயற்பாடுகள் வலுவடையும் என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (30) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆசியாவின் மிகவும் பெறுமதிமிக்க மற்றும் பசுமையான தீவாக இலங்கையை நிலைநிறுத்துவது பற்றியும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
சுற்றாடல் மற்றும் கலாசாரத் துறைகள் மூலம் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்தும் இந்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்துவதில் முறையான மற்றும் முறைசாரா துறைகளில் உள்ள அனைத்து தரப்பினர்களையும் ஒன்றிணைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
புத்தசாசன, மத அலுவல்கள் மற்றும் கலாசார அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி, சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபெந்தி, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் புத்திக ஹேவாவசம், வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார, மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டி.எம்.ஜே.நிலான் குரே உள்ளிட்ட அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர்.