48 நாள் நெற்றியில் குங்குமம் வைத்தால் கஷ்டங்கள் தீரும்
இந்து கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தில் ஆண்கள், பெண்கள் என அனைவருமே குங்குமம் அணிவதை ஒரு காலத்தில் வழக்கமாக கொண்டிருந்தனர்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் குங்குமம் அணியும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.
குறிப்பாக நவநாகரீக பெண்கள் குங்குமத்துக்கு பதிலாக ஸ்டிக்கர் பொட்டு அணிகிறார்கள்.
ஆனால் குங்குமம் அணிவது நமது பாரம்பரியம் மட்டுமல்லாமல், குங்குமம் அணியும் போது ஏராளமான நன்மைகளும் உள்ளன.
குங்குமத்தின் சிறப்பு அம்சங்கள் மற்றும் நன்மைகளை பற்றி தெளிவாக காணலாம்.
நமது அன்றாட வாழ்க்கையில் நாம் பாரம்பரியமாகவே பல்வேறு நல்ல விஷயங்களை பின்பற்றி வருகிறோம்.
இந்த குறிப்பிடத்தக்க நல்ல விஷயங்களில் ஒன்று நெற்றியில் குங்குமம் அணிவதும் அடங்கும்.
திருமணமான பெண்கள் குங்குமத்தை நெற்றியில் இரண்டு புருவத்தின் மத்தியிலும், உச்சி வகிடு பகுதியிலும் வைத்துக்கொள்ளலாம்.
திருமணம் ஆகாத பெண்கள் குங்குமத்தை நெற்றியில் மட்டுமே வைத்து கொள்ள வேண்டும்.
நம்முடைய பாரம்பரிய வழக்கப்படி திருமணமான பெண்களாக இருந்தாலும் சரி, திருமணமாகாத பெண்களாக இருந்தாலும் சரி, தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு நெற்றியில் குங்குமம் வைக்க வேண்டும்.
கூடுமானவரை இரண்டு புருவத்திற்கு நடுவே கட்டாயமாக குங்குமம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
காரணம் பெண்களுடைய உடம்பில் ஊடுருவக்கூடிய கெட்ட சக்தியானது, அந்த இரண்டு புருவத்தின் மத்தியில் தான் செல்லும் என்பது நம்முடைய முன்னோர்களின் கணிப்பு.
எனவே அந்த இடத்திற்கு ஒரு பாதுகாப்பு இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் குங்குமத்தை இரண்டு புருவங்களுக்கு மத்தியில் வைக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார்கள்.
மேலும் குங்குமம் உடல், மனம் மற்றும் உணர்ச்சி ஆகிய விஷயங்களிலும் பலதரப்பட்ட நன்மைகளை அளிக்க வல்லது. திருமணமான பெண்கள் குறிப்பாக, உச்சி முகட்டில் குங்குமத்தை வைக்கும் போது, அது உடலுக்கு குளிர்ச்சியை தரும். இந்த பகுதி உணர்திறன் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மஞ்சள் மற்றும் சந்தனத்தால் ஆன குங்குமத்தின் குளிர்ச்சியான பண்புகளால் உடலுக்கு பயன்கள் கிடைக்கிறது. இது ஆயுர்வேத மூலப்பொருளாகும். ஆயுர்வேதத்தில் உச்சந்தலையானது ஒரு முக்கிய ஆற்றல் மையமாகக் கருதப்படுகிறது.
குங்குமத்தில் உள்ள மஞ்சளில், அழற்ஜி எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளது.
எனவே, மஞ்சள் கொண்டு தயாரிக்கப்படும் குங்குமத்தை உச்சந்தலையில் வைத்தால், அது உடனடியாக நல்லதொரு பலனை அளிக்கிறது. இது பதற்றம் மற்றும் வெப்பத்தால் ஏற்படும் தலைவலியை குறைக்க உதவுகிறது.
குங்குமத்தில் உள்ள சிவப்பு நிறமானது உணர்ச்சி மற்றும் அன்பை குறிக்கிறது. அதாவது இது காதல் உணர்வுகளை அதிகரிக்கக் கூடியதாகும். திருமணமான பெண்கள் குங்குமம் அணியும் போது கணவருடன் நல்ல நெருக்கம் மற்றும் பிணைப்பை உருவாக்குகிறது.
மேலும் குங்குமம் அணிவது மனதை ஒருமுகப்படுத்தவும், இயற்கையான ஆற்றலை அதிகரிக்கவும் உதவும்.
இன்று பல்வேறு காரணங்களால் பலரும் தொடர்ந்து மன அழுத்தம் மற்றும் பதற்றத்துடன் காணப்படுகின்றனர். குங்குமம் மனநிலையை இயல்பாக்குவதற்கும், மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.
குங்குமத்தில் அடங்கியுள்ள மஞ்சள், சுண்ணாம்பு மற்றும் பாதரச சல்பைடு போன்ற இயற்கை பொருட்கள் மனதை அமைதிப்படுத்துவதற்கு உதவும்.
குங்குமம் அணிவதன் பலன்களை ஜோதிடர் அருளமுதம் பார்த்தசாரதி குருஜி இப்படி கூறுகிறார்.
பெண்கள் குங்குமத்தால் திலகம் இடுவது ரொம்ப ரொம்ப முக்கியம். குங்குமத்துக்கு ஹரித்ரா சூரணம் என்று பெயர். இது ஒரு மங்களகரமான பொருள்.
16 சவுபாக்கிய திரவியங்களில் ஒரு திரவியம் குங்குமம். இன்று பல பெண்கள் மஞ்சளும் பூசி கொள்வது கிடையாது, வளையலும் போட்டுக் கொள்வது கிடையாது, கழுத்தில் சங்கிலியும் அணிவது கிடையாது. மற்ற எல்லாவற்றையும் கூட விட்டு விடலாம், ஆனால் கைகளில் வளையல் போடாமல் இருக்கக் கூடாது. கழுத்து வெறும் கழுத்தாக இருக்கக் கூடாது, நெற்றியிலும் திலகம் இல்லாமல் இருக்கக் கூடாது. நெற்றியில் கண்டிப்பாக குங்குமம் வைக்க வேண்டும்.
நெற்றியில் திலகம் பெரிதாக யார் வைக்கின்றார்களோ அவர்களுக்கு எப்போதுமே நல்லது நடக்கும்.
குறைந்தபட்சம் 48 நாள் நெற்றியில் திலகம் வைத்தால் அந்த குடும்பத்தில் எவ்வளவு பெரிய கஷ்டங்கள் இருந்தாலும் அனைத்தும் தீர்ந்துவிடும்.
அது மட்டுமல்ல, அன்று முதல் அவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். ஐம்புலன்களும் அவர்களுக்கு கட்டுப்படும். எனவே பெண்கள் தினமும் நெற்றியில் குங்குமம் அணியுங்கள்.