
விஜய குமாரதுங்க ஓர் ஆதர்ஷ தலைவர்
விஜய குமாரதுங்கவின் வாழ்வில் அவர் உருவாக்கிய பார்வை, கடைப்பிடித்த நடைமுறைகள் என்பன குறிப்பாக வீழ்ச்சியடைந்த மற்றும் வங்குரோத்தடைந்துள்ள எமது நாட்டைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் முக்கியத்துவம் கொடுத்து நோக்க வேண்டிய அம்சங்களாகும்.
மனிதநேயமிக்க அரசியல்வாதியாக திகழ்ந்த விஜய குமாரதுங்கவின் வாழ்க்கையில் நாம் எடுக்க வேண்டிய பல ஆதர்சங்கள் காணப்படுகின்றன. வங்குரோத்தடைந்துள்ள எமது நாட்டைக் கட்டியெழுப்ப இதுவும் ஒரு காரணமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
விஜய குமாரதுங்கவிடம் காணப்பட்ட பல உன்னத குணங்கள் இன்றைய காலகட்டத்திற்கு முக்கியமானவையாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இலங்கையின் பிரபல சிங்கள திரைப்பட நடிகரும், மனிதாபிமானமிக்க அரசியல்வாதியாகவும் திகழ்ந்த விஜய குமாரதுங்க அவர்களின் 37 ஆவது நினைவு தின நிகழ்வில் நேற்று (15) கலந்து கொண்டு நினைவுப்பேருரை ஆற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
விஜய குமாரதுங்க அவர்கள் ஓர் ஒப்பற்ற மனிதர். கலைத்துறையில் மிக உயர்ந்த நிலைக்கு சென்ற, நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பிரபலமான திரைப்பட நடிகராவார். அவரிடம் பல உன்னத குணங்கள் குடிகொண்டிருந்தன.
அவர் ஒரு நேர்மையான, தூய்மையான அரசியல்வாதியாவார். அவரது மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசி விடுவார். மனதில் இருக்கும் தனது கருத்தை வெளிப்படையாகவே மக்கள் மத்தியில் தெரிவித்து விடுவார்.
தனக்கு தனிப்பட்ட ரீதியாக நன்மை கிடைக்கும் என இருந்த சகல சந்தர்ப்பங்களிலும் அதிகாரத்திற்காக தனது கொள்கைகளை காட்டிக்கொடுத்து சோரம் போகாதவராக திகழ்ந்தார் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சமீபகால நமது நாட்டின் ஜனநாயக வரலாற்றை பார்க்கும் போது, பல்வேறு சந்தர்ப்பங்களில் அதிகார மாற்றத்திற்காக தாங்கள் நம்பிய கொள்கைகளை மிக அதிக விலைக்கு, பகிரங்க ஏலத்தில் விலைபோய், காட்டிக் கொடுக்கும் கலாசாரம் நாட்டில் நிலவும் இக்காலத்தில் விஜய குமாரதுங்க ஓர் ஆதர்ஷ அரசியல்வாதியாவார்.
கொள்கைகளுக்கு துரோகம் செய்யாத, அதிகாரத்திற்காக எதையும் தியாகம் செய்யும், நாட்டு மக்களுக்கு எவ்வாறானாலும் தனக்கு பதவிகள் கிடைத்தால் போதும் என்று கூறும் சீரழிந்து போன அரசியல் கலாசாரத்தை விஜய குமாரதுங்க அன்றே எதிர்த்தார்.
சாதாரண மக்கள் படும் துன்பங்களை தயக்கமின்றி உணரும், அதனை கருத்திற் எடுத்து நடவடிக்கை எடுக்கும் அரசாங்கம் நாட்டுக்கு தேவை. விஜய குமாரதுங்க தனது அரசியலை முன்னெடுத்த காலப்பிரிவில் அன்றிருந்த முக்கிய சகல அரசியல் கட்சிகளாலும் பல வகையிலும் அவர் தாக்கப்பட்டாலும் சளைக்காது தனது அரசியலை முன்னெடுத்து வந்தார்.
தைரியம், உறுதிப்பாடு, செயல்திறன் போன்றவற்றால் தனது இலக்குகளை அடைய பல தியாகங்களைச் செய்தார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மட்டுமே மனித உரிமைகளாகக் கருதப்பட்டாலும் மனித உரிமைகள் என்பதற்கு பரந்த எல்லைகள் காணப்படுகின்றன.
பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளும் இதில் அடங்க வேண்டும். கல்வி, சுகாதாரம், விவசாயம், தொழில்துறை, உழைக்கும் மக்கள் என சகலரினதும் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில், மனித உரிமைகள் பரந்த பொருளில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
விஜய குமாரதுங்க அவர்கள் இதனை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு நடந்த ஒருவர் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.