
நாட்டில் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், பாதாள குழுக்களின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்குரிய நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன என்று ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று (19) எதிரணி எம்.பிக்கள் வெளியிட்ட கருத்துகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் அவர், ” பாதாள குழுக்களின் செயல்பாடுகளுக்கு எதிராக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
எனினும், கறுப்பு பணம், போதைப்பொருள் விநியோகம் உள்ளிட்ட பல நடவடிக்கைகளுடனும் பாதாளக்குழுக்கள் தொடர்புபட்டுள்ளன. இவற்றை இயக்குபவர்களுள் சிலர் எமது நாட்டில்கூட இல்லை.
விசாரணைகளை முன்னெடுத்து செல்கையில் சில இடங்களில் சில பாதுகாப்பு தரப்பினர் இதனுடன் சம்பந்தப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விசேட அதிடிரப்படை, பொலிஸ் மற்றும் புலனாய்வாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதனால் தான் அரசாங்கம் வழங்கியுள்ள துப்பாக்கிகளை மீள கையளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியா, டுபாயில் இருந்த குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்துவந்து விசாரணைகள் இடம்பெறுகின்றன.
இப்படி பல நடவடிக்கைகள் இடம்பெற்றாலும் அவை அனைத்தையும் முன்கூட்டியே வெளிப்படுத்த முடியாது.
எது எப்படி இருந்தாலும் இப்பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் உரிய தலையீடுகளை மேற்கொண்டு, உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்கும்.” என தெரிவித்துள்ளார்.