மகுடம் சூடப்போவது யார் ? இறுதி போட்டியில் இந்தியா- தென்னாபிரிக்கா இன்று மோதல்
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரி இறுதி போட்டியில் இன்று தென்னாபிரிக்கா அணி இந்தியாவை எதிர்கொள்கிறது.
நடப்பு தொடரில் இரு அணிகளும் தோல்வியை தழுவாமல் விளையாடியுள்ளது.
பார்படோஸ், கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இலங்கை நேரப்படி
இன்று இரவு 8 மணிக்கு ஆரம்பமாகும் இறுதி போட்டியில் தென்னாபிரிக்க அணி முதல் முறையாக உலகக் கிண் ணத்தை வெல்லும் எதிர்பார்ப்புடனும், இந்திய அணி 17 ஆண்டுகளின் பின்னர்
முதல் முறை சம்பியனாகும் எதிர்பார்ப்புடனும் களமிறங்குகின்றன.
தென்னாபிரிக்க அணி அரையிறுதியில் ஆப்கானிஸ்தானை ஆப்கானில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய நிலையில் இந்திய அணி நேற்று முன்தினம் (27) நடந்த இரண்டாவது அரையிறுதியில் நடப்புச் சம்பியன் இங்கிலாந்தை வெளியேற்றியது.
துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் சரிசமமான வீரர்களை கொண்ட இந்தியா, அனைத்து போட்டிகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது.
குறிப்பாக அணித் தலைவர் ரோஹித் ஷர்மா சோபித்து வருகிறார்.
அவர் ஆரம்பத்திலேயே ஓட்டங்களை குவிப்பதோடு அடுத்து வரும் ரிஷப் பண்ட் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹார்திக் பாண்டியா அந்த ஓட்ட வேகத்தை தக்கவைக்கும் வகையில் ஆடுகின்றனர்.
இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி இந்தத் தொடரில் இதுவரை எந்தப் போட்டியிலும் சோபிக்கவில்லை
இந்திய அணியின் பந்துவீச்சும் எதிரணி துடுப்பாட்ட வீரர்களுக்கு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது.
ஜெஸ்பிர் பும்ராவின் பந்துகள் ஆரம்பத்தில் எதிரணியின் ஓட்ட வேகத்தை முறியடிப்பதோடு சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அபாரமாக செயற்பட்டு வருகிறார்.
தென்னாபிரிக்க அணியை பொறுத்த வரையில் துடுப்பாட்டத்தில் குயின்டன் டி கொக்கின் அதிரடி ஆட்டமே அந்த அணிக்கு பெரிதும் கைகொடுத்திருக்கிறது.
ஹெயின்ட்ரிச் கிளாசன் ஆடுகளத்தில் இறக்கும் வரை எதிரணிக்கு ஆபத்தாகவே அமையும்.
அணித் தலைவர் எய்டன் மாக்ரம், அனுபவ வீரர் டேவிட் மில்லர் போன்ற வீரர்கள் தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டத்தில் முக்கியமானவர்கள்.
வேகப்பந்து வீச்சாளர்களான ககிசோ ரபாடா மற்றும் அன்ட்ரிட்ஜ் நொட்ஜே பந்துவீச்சில் நம்பிக்கை தருகின்றனர்.
இம்முறை உலகக் கிண்ணத்தில் ஆடுகளங்கள் முக்கிய பாத்திரம் வகித்து வருகின்றன.
தென்னாபிரிக்கா மற்றும் ஆப்கான் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முதலாவது அரையிறுதியின் டிரினிடாட், பிரையன் லாரா ஆடுகளம் மோசமாக இருந்தது என்று பரவலாக விமர்சனங்கள் எழுந்தன.
இங்கு முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கான் அணி 56 ஓட்டங்களுக்கே சுருண்டது.
அதேபோல இரண்டாவது அரையிறுதிப் போட்டி நடைபெற்ற கயானா, புரவிடன்ஸ் மைதானத்தில் பந்து சற்று தாழ்வாக வந்ததோடு சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.
பொதுவாக மேற்கிந்திய தீவுகளின் ஆடுகளங்கள் சுழற்பந்துக்கு சாதகமாக இருகின்றது.
எனவே இந்திய அணி இன்றைய இறுதி போட்டியில் குல்தீப் யாதவ் உடன் அக்சார் படேல் ஆகிய இரு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கலாம்.
தென்னாபிரிக்கா அணி தொடர் முழுவதும் பெரும்பாலும் ஒரு விசேட சுழற்பந்து வீச்சாளருடனேயே களமிறங்கியது.
மேலும் இன்று நடைபெறவுள்ள இறுதிபோட்டியில் மழை குறுக்கிடும் வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறுதிபோட்டி நடைபெறவுள்ள பிரிட்ஜ்டவுனில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். குளிர்ந்த காற்று, இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு 70 சதவீதம் வாய்ப்பிருப்பதாக வானிலை
ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.