இஸ்ரேலிய கட்டுப்பாட்டு கோலன் குன்று தாக்குதலால் லெபனானுடன் முழு அளவில் போர் வெடிக்கும் அச்சம் !

இஸ்ரேலிய கட்டுப்பாட்டு கோலன் குன்று தாக்குதலால் லெபனானுடன் முழு அளவில் போர் வெடிக்கும் அச்சம் !

லெபனானில் இருந்து நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் இஸ்ரேல் ஆக்கி
ரமிப்பு கோலன் குன்றில் 12 சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கொல்லப்பட்டதை அடுத்து தெற்கு லெபனானின் பல இலக்குகள் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்திய
நிலையில் முழு அளவில் போர் வெடிக்கும் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.

மறுபுறம் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து நீடிக்கும் நிலையில் அங்கு
இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் பாடசாலை உட்பட பல இடங்களில் நடத்திய தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

கோலன் குன்று தாக்குதலை அடுத்து ‘எதிரி மீது கடும் தாக்குதல் நடத்தப்படும்’ என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன்ட் நேற்று எச்சரித்த நிலையில் அமெரிக்கா பயணித்தின் பின் இஸ்ரேல் திரும்பிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தை நடத்தியதோடு, ‘கடும் பதிலடி கொடுப்போம்’ என்று உறுதி பூண்டுள்ளார்.

லெபனானில் புதிய இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டால் ‘எதிர்பாராத விளைவுகளுக்கு இட்டுச்செல்லும்’ என்று இஸ்ரேலை ஈரான் எச்சரித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி காசாவில் போர் வெடிக்க தூண்டுதலாக அமைந்த இஸ்ரேல் மீதான பலஸ்தீன போராளிகளின் தாக்குதலுக்குப் பின்னர் இஸ்ரேலிய பொது மக்கள் மீதான மிகப்பெரிய தாக்குதலாக இந்தத் தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

காசாவில் போர் வெடித்தது தொடக்கம் லெபனானுடனான எல்லையில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா போராளிகள் கிட்டத்தட்ட தினசரி தாக்குதல்களை நடத்தி வந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த ரொக்கெட் தாக்குதலுக்கு லெபனானின் ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் குற்றம்
சாட்டியபோதும் ஈரான் ஆதரவு பெற்ற அந்த அமைப்பு, இந்தத் தாக்குதலுக்கும் தமக்கும்
தொடர்பில்லை என்று மறுத்துள்ளது.

கோலன் குன்றில் உள்ள துரூஸ் மக்கள் வசிக்கும் மஜிதல் ஷம்ஸ் சிறு நகரில் உள்ள
கால்பந்து மைதானம் ஒன்றில் கடந்த சனிக்கிழமையே ரொக்கெட் குண்டு விழுந்துள்ளது.

காசாவில் மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் பாடசாலை ஒன்றை தாக்கி 30 பேரை கொன்ற சம்பவம் இடம்பெற்று சில மணி நேரங்களிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

மத்திய காசாவின் டெயிர் அல் பலாஹ்வில் உள்ள கதீஜா பாடசாலை மீதே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்தது.

கொல்லப்பட்டவர்களில் பதினைந்து சிறுவர்கள் மற்றும் எட்டு பெண்கள் அடங்குவதோடு மேலும் 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

எனினும் கதீஜா பாடசாலைக்குள் இருக்கும் ஹமாஸ் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டுமையத்தையே இலக்கு வைத்ததாக இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப்பாடசாலை இஸ்ரேலிய துருப்புகள் மீது ரொக்கெட் தாக்குதல்களை நடத்த பயன்
படுத்தப்படுவதாகவும் இங்கு ஆயுதங்கள்கைப்பற்றப்பட்டதாகவும் தாக்குதலுக்கு முன்னர் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டதாகவும் அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காசாவில் ஆட்சி புரியும் ஹமாஸ் அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ‘கதீஜா பாடசாலையில் இடம்பெற்ற இனப்படுகொலை, இஸ்ரேலிய எதிரிகள் அனைத்து மனிதப் பெறுமானங்களில் இருந்து விலகி அனைத்து போர் சட்டங்களையும் மீறுவதை உறுதி செய்வதாக உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தெற்கு காசாவில் கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் சரமாரி வான் தாக்குதல்களை தொடரும் நிலையில் நேற்றுக் காலை குறைந்தது எட்டு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் நாசர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

கான் யூனிஸ் நகரில் இஸ்ரேலியப் படைவான் மற்றும் தரை மார்க்கமாக அண்மை நாட்களாக தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில் நேற்று முன்தினம் இஸ்ரேலின் தாக்குதல்களில் இங்கு குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டிருந்தது.

கடந்த திங்கட்கிழமை தொடக்கம் கான் யூனிஸ் மீது நடத்தி வரும் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 180 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலின் வெளியேற்ற உத்தரவை அடுத்து கான் யூனிஸ் நகரில் இருந்து சுமார்
இரண்டு இலட்சம் பேர் வரை மீண்டும் ஒருமுறை வெளியேறிச் சென்றிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் காசாவில் 80 வீதத்துக்கும் அதிகமான பகுதி இஸ்ரேலின் வெளியேற்ற உத்தரவு மற்றும் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட பகுதிகளாக உள்ள நிலையில் அங்கு எந்த இடமும் பாதுகாப்பாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காசாவில் கடந்த ஒன்பது மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 66 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்மூலம் காசாவில் இதுவரை கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 39,324 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 90,830 பேர் காயமடைந்துள்ளனர்.

காசா போரை ஒட்டி லெபனான் மற்றும் இஸ்ரேல் எல்லையில் கடந்த ஒக்டோபர் தொடக்கம் இடம்பெற்றுவரும் பரஸ்பர தாக்குதல்களில் இஸ்ரேல் தரப்பில் 21 படையினர் உட்பட 44 பேர் கொல்லப்பட்டிருப்பதோடுலெபனானில் குறைந்தது 543 பேர் பலியாகி இருப்பதாக போர் கண்காணிப்புக் குழு ஒன்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோலன் குன்றில் இடம் பெற்ற தாக்குதலை அடுத்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தனது அமெரிக்க பயணத்தை சுருக்கிக் கொண்டு இஸ்ரேல் திரும்பியதோடு நேற்று தனது பாதுகாப்பு அமைச்சரவையை அவசரமாகக் கூட்டினார்.

‘இந்தக் கொலைகார தாக்குதலுக்கு இஸ்ரேல் பதில் கூறாமல் விடாது.

இதற்காக ஹிஸ்புல்லா இதற்கு முன்னர் கொடுக்காத பெரும் விலையை கொடுக்க வேண்டி இருக்கும்’ என்று நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

ஹிஸ்புல்லா சிவப்புக் கோட்டை தாண்டிவிட்டதாக இஸ்ரேலிய வெளியுறவு
அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் லெபனானின் தெற்கு மற்றும் மற்ற பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் நேற்றுக் கூறியது.

ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் அமைதிகாக்கும்படி வலியுறுத்தியுள்ளது.

லெபனானுக்கான ஐ.நா. சிறப்பு ஒருங்கிணைப்பாளர் ஜீனைன் ஹெனிஸ்பிளாஸ்சேர்ட் மற்றும் லெபனானில் உள்ள ஐ.நா. இடைக்காலப் படை தலைவர் அரோல்டோ லாசாரோ ஆகியோர் கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

‘பரஸ்பர தாக்குதல்கள் பரந்த அளவில் மோதலை ஏற்படுத்தி நம்ப முடியாத பேரழிவை ஏற்படுத்தும் ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் பரந்த அளவில் மோதல் ஒன்றுக்குள் மூழ்கடித்துவிடும்’ என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

காசா போர் ஏற்கனவே பிராந்தியத்தில் போர் பதற்றத்தை அதிகரித்திருக்கும் நிலையில் போர் நிறுத்த முயற்சியாக அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏ. வின் தலைவர் வில்லியம் பர்ன்ஸ் நேற்று ரோம் நகரில் இஸ்ரேல் மற்றும் எகிப்து உளவுப்
பிரிவு தலைவர்கள் மற்றும் கட்டார் பிரதமரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

போரை முடிவுக்குக் கொண்டுவர போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றை ஹமாஸ் கோரும் அதேநேரம் ஹமாஸ் தோற்கடிக்கப்பட்டால் மாத்திரமே போர் முடிவுக்கு வரும்
என்று நெதன்யாகு சூளுரைத்து வருகிறார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )