புதிய அரசமைப்பு  மூலமே நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்

புதிய அரசமைப்பு மூலமே நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்

“புதிய அரசமைப்பு அமைக்கப்பட வேண்டும். அதன் மூலமே நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு கண்ட பின்னர் தான் புதிய அரசமைப்பு தயாரிப்புக்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.” என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (27) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி செலவின தலைப்பின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவர், “புதிய அரசமைப்பின் தேவைப்பாடு தொடர்பில் அதிகமான தமிழ்ப் பத்திரிகைகளில் எழுதப்பட்டிருக்கின்றன. தேசிய மக்கள் சக்தி அரசின் தேர்தல் விஞ்ஞானக் கொள்கையிலும் அது தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

புதிய அரசமைப்பின் மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

குறிப்பாக இந்த அரசு தேர்தல் பிரசாரக் காலப் பகுதியில் புதிய அரசமைப்பு ஒன்றை அதிகாரத்துக்கு வந்து 3 மாதங்களில் உருவாக்குவதாகத் தெரிவித்திருந்தது. ஆனால், தற்போது அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை.

அத்துடன் பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு கண்ட பின்னர் புதிய அரசமைப்பு தயாரிப்புக்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்திருக்கும் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

அதேநேரம் புதிய அரசமைப்பு 3 வருடங்களுக்குப் பின்னர் கொண்டுவரப்படும் என அவர் தெரிவித்திருப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது அவர்கள் தேர்தல் காலத்தில் மக்களுக்குத் தெரிவித்து வந்த வாக்குறுதிக்கு மாற்றமானதாகும்.

மேலும், மலையக மக்களுக்கு ஏற்பட்டிருப்பது 76 வருட சாபக்கேடு அல்ல. 200 வருட சாபக்கேடு. அதனால் அந்த மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும். அதற்கு முன்னர் அங்கு முறையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

அதன் மூலமே அந்த மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். அதனைவிடுத்து கடந்த காலங்களில் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சிகளை, அரசியல்வாதிகளை விமர்சிப்பதில் பயனில்லை.

மக்கள் தற்போது இந்த அரசுக்கு ஆணை வழங்கி இருக்கின்றார்கள். அதனால் அரசு மலையக மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு எங்களால் முடிந்த ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருக்கின்றோம்.

மேலும் மலையகத்தில் அமைக்கப்படும் வீடுகள் தொடர்பில் நான் இந்தச் சபையில் கேட்டிருந்தேன். அதற்குப் பிரதி அமைச்சர் ஒருவர் ஆவேசப்பட்டு பதில் அளித்திருந்தார்.

மலையகத்தில் அமைக்கப்படும் வீடுகள் மாடி வீடா, தனி வீடா என அரசுக்குள்ளே மாறுபட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. அதனாலே இதனைக் கேட்டேன்.

அதேபோன்று அந்த வீடுகளை அமைப்பதற்குக் காணி வழங்குவதாக இருந்தால் எத்தனை பேர்ச் காணியை அரசு வழங்கப் போகின்றது. ஏனெனில் நாங்கள் மலையக மக்களுக்கு 7 பேர்ச் காணியைப் போராடி பெற்றுக்கொடுத்திருக்கின்றோம்.

கடந்த அரசு காலத்தில் அது 10 பேர்ச் காணியாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதனால் அரசு இந்தக் கேள்விகளுக்கு இந்த வரவு – செலவு திட்ட விவாதம் முடிவடைவதற்கு முன்னர் பதிலை அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)