
வடக்குக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டிய கூடுதல் பொறுப்பு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு உள்ளது
வடக்குக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டிய கூடுதல் பொறுப்பு ஏனைய அரசுகளைவிட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு உள்ளது என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணாயக்கார தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் அவர் , ” இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வருடம் ஒக்டோபர் மாதத்தில் தேசிய விழாவொன்றை நடத்தவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல மொழிப்பிரச்சினையை தீர்ப்பதற்கும் உரிய தலையீடுகள் செய்யப்பட்டுவருகின்றன.
தேசிய ஒருமைப்பாட்டுக்காக இந்நாட்டுக்கு அமைச்சொன்று தேவையில்லை என்ற நிலை வரும்போதே எமது வேலைத்திட்டங்கள் வெற்றி என்ற முடிவுக்கு வரமுடியும். அப்போதுதான் எனக்கும் மகிழ்ச்சி ஏற்படும்.
கடந்த தேர்தல்களின்போது வடக்கு மக்கள் வலுவானதொரு செய்தியை வழங்கினர். எனவே, ஏனைய அரசுகளைவிடவும் வடக்குக்கு நீதியை வழங்க வேண்டிய கூடுதல் பொறுப்பு எமது அரசுக்கு உள்ளது. பாதீட்டிலும் நாம் உரிய ஒதுக்கீடுகளை வழங்கியுள்ளோம்.
சொல்லுக்கு அப்பால் சென்று, நல்லிணக்க முயற்சியை செயலில் காட்டிவருகின்றோம்.” என தெரிவித்துள்ளார்.