
கம்பஹா துப்பாக்கிச் சூடு : பின்னணியில் கணேமுல்ல சஞ்சீவ ஆதரவாளர்
கம்பஹா – அக்கரவிட்ட பகுதியில் நேற்று மாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவின் ஆதரவாளர்களால் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மோட்டார்சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூட்டில்
நடத்தப்பட்டுள்ளதுடன் இதில் இருவர் காயமடைந்துள்ளனர்
மோட்டார் சைக்கிள் உதிரிப்பாக விற்பனை நிலையமொன்றினுள் இருந்த இருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதில் உதிரிப்பாக விற்பனை நிலையத்தின் உரிமையாளரான 34 வயதுடைய ஒருவரும், அவரது உதவியாளரான 30 வயதுடைய ஒருவருமே சம்பவத்தில் காயமடைந்த நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்ற சந்தேக நபர்களைக் கைதுசெய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த உதிரிப்பாக விற்பனை நிலையத்தின் உரிமையாளர், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர் என்பதுடன் திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினராக கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்புடையவர் என்பதும் பொலிஸாரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
அத்துடன், அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட சுமித் என்ற நபர், போதைப்பொருள் கடத்தலை நிறுத்துமாறு பல சந்தர்ப்பங்களில் அவரை அச்சுறுத்தியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
அதற்கமைய, இந்த துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் சுமித் என்ற குறித்த நபர் செயற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.