இலங்கை தமிழரசு கட்சி தனி அணியாகவே போட்டியிடும்

இலங்கை தமிழரசு கட்சி தனி அணியாகவே போட்டியிடும்

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தனி அணியாகவே போட்டியிடும் என அந்தக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளைக் கூட்டம் நேற்று (08) மாலை மட்டக்களப்பில் கட்சியின் மாவட்ட தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது.

இதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே எம்.ஏ.சுமந்திரன் இந்த விடயத்தை தெரிவித்தார்.

மேலும் அவர் ” மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை நாங்கள் போட்டியிடுகின்ற சகல உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி வாகை சூடலாம் என்று நம்பிக்கையோடு எங்களுடைய உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்.

வருகின்ற வாரத்துக்குள் நாங்கள் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து விடுவதாகத் தீர்மானித்திருக்கின்றோம்.

ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிட வேண்டாம் என்று கூட்டத்தின்போது அனைவராலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அந்த முயற்சி முடிவடைந்துவிட்டது என்பதுதான் என்னுடைய கருத்து.

எங்களுடைய கட்சியின் பதில் தலைவர் அதற்கான ஒரு முயற்சியை முன்னெடுத்திருந்தார். ஆனால், எங்களுடன் பங்காளிகளாக இருந்த கட்சிகள் தாங்கள் வேறு ஒரு கூட்டணியாக இணைந்து இருக்கின்றோம் என்று எங்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள்.

ஆகையினால் ஓர் அணியாக ஒன்று சேர்ந்து போட்டியிடுவது என்பது இப்போது முடியாத விடயம். தமிழரசுக் கட்சி தனி அணியாகப் போட்டியிடும்.

அதேவேளை தேர்தலுக்குப் பின்னர் நிர்வாகங்களை அமைக்கின்ற விடயத்தில் ஒவ்வொரு கட்சிகளுடன் இணைந்துதான் நிர்வாகத்தை அமைக்க வேண்டியதாக இருக்கும். எனவே, அது குறித்து தொடர்ச்சியாகப் பல கட்சிகளோடும் பேச்சு நடத்திவருகின்றோம்.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)