மலையக பகுதிகளில் உள்ள பாடசாலைகளை மேலும் நவீன மயப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்

மலையக பகுதிகளில் உள்ள பாடசாலைகளை மேலும் நவீன மயப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்

மலையகப் பெருந்தோட்ட பாடசாலைகளின் கல்வித் தரத்தை முன்னேற்றுவதுடன் குறிப்பாக உயர்தர மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் அதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வேலுசாமி இராதாகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (10) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர், ”முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் மலையகத் தோட்டப் பாடசாலைகளுக்கு 3400 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் 3500 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

நல்லாட்சி காலத்தில் 3190 ஆசிரியர்கள் மீண்டும் நியமிக்கப்பட்டனர். அந்தவகையில் மேலும் 2500 ஆசிரியர்களை மலையகத்திற்கு நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ள நிலையில் அது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த வழக்கு முடிவடைந்ததும் அந்த ஆசிரியர் நியமனங்களை உடனடியாக வழங்குவதற்கு பிரதமரான கல்வியமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மலையக பகுதிகளில் உள்ள கல்வி பொது தராதர உயர்தரம் வரை கற்பிக்கும் பாடசாலைகளை மேலும் நவீன மயப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

அவ்வாறான வசதிகள் ஏற்படுத்தப்பட்டால் மாத்திரமே மலையக மாணவர்கள் அதிகளவில் பல்கலைக்கழகங்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.

மலையகப் பகுதிகளிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு போக வேண்டிய 1.5 வீத மாணவர் எண்ணிக்கைக்குப் பதிலாக தற்போது 0.5 வீத மாணவர்களே அவ்வாறு பல்கலைக்கழகங்களுக்கு செல்கின்றனர்.

சிறப்பான ஆசிரியர்களை அப்பகுதிக்கு நியமித்து இந்த எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மலையகப்பகுதிகளில் பெரும்பாலும் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது மிகவும் குறைவு. எமது காலத்தில் இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு நாம் தீர்மானித்த போது அதற்கு ஜே.வி.பியினரே எதிர்ப்புத் தெரிவித்தனர்.

தற்போதைய அரசாங்கம் அது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். இம்முறை வரவு செலவு திட்டத்தில் கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்காக இரண்டு இலட்சத்து ரூ. 21 ஆயிரம் மில்லியன் அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

உள்நாட்டு வெளிநாட்டு நிதி என பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை வைத்து நாட்டின் கல்வித் துறையை சிறப்பாக அபிவிருத்தி செய்யுமாறு நாம் அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றோம்.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)