
ஆட்சியாளர்களின் தேவைக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டிருந்த நாட்டின் அனைத்து முறைமைகளையும் மக்கள் சேவைக்கு ஏற்றவாறு மாற்றி வருகிறோம்
இந்த நாட்டின் அனைத்து முறைமைகளும் ஆட்சியாளர்களின் பாதுகாப்பிற்காக அவர்களின் தேவைக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டிருந்ததாகவும், தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு சேவை செய்வதற்கு ஏற்றவாறு அந்த அனைத்து முறைமைகளையும் படிப்படியாக மாற்றி வருவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
அம்பாறை பிரதேசத்தில் நடைபெற்ற பெண்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய-
கடந்த ஐந்து மாதங்களில் அரசாங்க அதிகாரிகளிடமோ அல்லது பொலிசாரிடமோ இதை செய்ய வேண்டாம், இதைச் செய்யுங்கள் என்று அழுத்தம் கொடுத்து எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பேனும் வந்ததா என்று கேட்டுப்பாருங்கள். அப்படி நடக்கவில்லை. அந்த கலாசாரத்தை மாற்றியுள்ளோம். இப்போது சட்டம் நாட்டில் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. எமது நாட்டில் சட்டம் இருக்கிறது என்று மக்கள் உணர ஆரம்பித்துவிட்டனர். இதன் மூலம், நாட்டின் அனைத்து சேவைகளும் படிப்படியாக சரியான திசைக்கு கொண்டுவரப்படுகின்றன.
இந்த நாட்டில் இருந்த அனைத்து முறைமைகளும் ஆட்சியாளர்களைப் பாதுகாக்கவும், ஆட்சியாளர்கள் விரும்பியபடி செயல்படுவதற்காகவும் மாற்றப்பட்டன. இன்று நாம் இந்த முறைமையை படிப்பாடியாக மாற்றி மக்களின் பாதுகாப்புக்கும் சேவைக்கும் ஏற்றதாக மாற்றிவருகிறோம்.
இதை இருபத்து நான்கு ணி நேரத்தில் நூறு வீதம் செய்துவிட முடியாது. காலம் தேவை. இந்நாட்டு மக்கள் பல ஆண்டுகளாகப் பழக்கப்பட்ட ஒரு முறைமை உள்ளது. இது மாற வேண்டும். மக்கள் ஒரே இரவில் மாற மாட்டார்கள். ஆனால் அந்த மாற்றத்திற்குத் தேவையான தலைமைத்துவத்தையும் வழிகாட்டுதலையும் முன்னுதாரணத்தையும் வழங்கி வருகிறோம். எனவே, இந்த நாட்டை சரியான திசைக்கு கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
இன்று ஒரு சின்ன தவறை சொன்னாலோ, ஒரு சின்ன தவறை செய்தாலோ எதிரணியில் இருந்து பெரிய சத்தம் கேட்கிறது. நாங்கள் அதை விரும்புகிறோம். இந்த அரசியல் கலாசாரத்தையே மக்கள் எதிர்பார்த்தனர்.
இவ்வளவு காலம் முடிவெடுக்கத் தயங்கிய, ஒதுக்கப்பட்டிருந்தவர்கள் இப்போது மீண்டும் வெளியே வரத் தொடங்கியுள்ளனர்.
நாம் ஒன்றிணைந்து, சகோதரிகளின் வீடுகளில் சிறு சிறு குழுக்களாக ஒன்று கூடி, பேசி, பல கிலோமீட்டர்கள் நடந்து, வீதிகளில் கண்ணீர் புகை, தண்ணீர் தாரை தாக்குதல் என பல விரும்பத்தகாத அனுபவங்களுக்கு முகம்கொடுத்தே இங்கு வந்துள்ளோம். எனவே நீங்கள் அனைவரும் இந்த வெற்றியின் பங்காளிகள்.
இவ்வளவு காலமும் நாம் கொள்கைகளைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் நடைமுறைப்படுத்த அதிகாரம் இருக்கவில்லை. அந்த அதிகாரம் இப்போது எங்களிடம் உள்ளது. அதனுடன் எமது கொள்கைகளை ஒவ்வொன்றாக இந்த நாட்டில் முறையாக நடைமுறைப்படுத்த முடிந்துள்ளது.
எமது அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் அடுத்த எட்டு மாதங்களுக்கான திட்டத்தை முன்வைத்துள்ளோம். அதன் மூலம் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான அடித்தளத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். பல வருடங்களாக பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்கு எவ்வாறு நன்மைகளை வழங்குவது என்பதே எமது முதல் சவாலாக இருந்தது. பொருளாதார நெருக்கடியில் இருந்து நாம் இன்னும் மீளவில்லை. ஆனால் முடிந்தவரை மக்களுக்கு நன்மைகளை வழங்குவதற்கு நாங்கள் உழைத்து வருகிறோம்.
இந்த நாட்டில் அரச சேவை அரசியலால் சீரழிக்கப்பட்டிருந்தது. இன்று அந்த சேவைக்கு மதிப்பளிக்கும் சூழல் உருவாகி, சுதந்திரமாக செயற்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளதுடன், இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் முத்து ரத்வத்த உட்பட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு