
கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் 100 அதிசொகுசு, உயர் தொழிநுட்ப மெட்ரோ பஸ்கள் சேவையில்
100 மெட்ரோ பஸ்களை சேவையில் ஈடுபடுத்தும் முன்னோடி திட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் பொது போக்குவரத்தை நவீனமயமாக்கும் வகையில் 100 அதி சொகுசு உயர் தொழிநுட்பத்துடன் கூடிய மெட்ரோ பஸ்களை சேவையில் ஈடுபடுத்தும் முன்னோடி திட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இந்த வசதியான, மேம்பட்ட தொழில்நுட்பபஸ்களை அறிமுகப்படுத்தவும் முன்மொழியப்பட்டது.
அதன்படி, கொழும்பு, மக்கும்புர, கடுவெல, கடவத்தை மற்றும் மொரட்டுவ உள்ளிட்ட மேல் மாகாணத்தின் பல முக்கிய பகுதிகளில் இந்த மெட்ரோ பயணிகள் பஸ்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சரின் முன்மொழிவை கருத்தில் கொண்டு, 2007 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் இலங்கை போக்குவரத்து சபையின் துணை அமைப்பை நிறுவுவதற்கும், முன்மொழியப்பட்ட திட்டத்தை செயல்படுத்துவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

