
சிங்கிமலை நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்த மாணவன் ; தேடும் பணி தீவிரம்
ஹட்டன் சிங்கிமலை நீர் தேக்கத்தில் விழுந்த பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக ஹட்டன் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு விழுந்து காணாமல் போனவர் ஹட்டன், கொட்டகலை, கேம்பிரிட்ஜ் தமிழ் மகா வித்தியாலயத்தில் 13 ஆம் தரத்தில் கல்வி கற்று வரும் மாணவர் ஆவார்.
குறித்த மாணவன் தனது 06 நண்பர்களுடன் நேற்று(08) மதியம் புகைப்படம் எடுக்க நீர்த்தேக்கத்திற்கு மேலே உள்ள சிங்கிமலை வனப்பகுதிக்குள் நுழைந்து பின்னர் நீர்த்தேக்கத்தின் நீரில் கால்களைக் கழுவ முயன்றபோது நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்ததாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் நகருக்கு குடிநீரை விநியோகிக்கும் ஹட்டன் சிங்கிமலை நீர் தேக்கத்தில் தற்போது அதிக நீர்மட்டம் இருப்பதால் காணாமல் போன மாணவரின் உடலைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், மாணவரின் உடலைக் கண்டுபிடிக்க பொலிஸார் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

