
அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தங்கத் தேர் திருவிழா
இலங்கைத் திருநாட்டின் தலைநகரமாக விளங்கும் கொழும்பு மாநகர் கொம்பனித்தெருவில் வீற்றிருந்து வேண்டுவோர்க்கு வேண்டுவன அருள்பாலித்துவரும் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத அருள்மிகு சிவசுப்பிரமணியப்பெருமான் நேற்று (20) தங்கத்தேரில் வெளிவீதி வலம் வந்து அடியார்களுக்கு அருள்பாலித்தார்.


இத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதுடன், அடியார்கள் அங்கப்பிரதட்சணம் செய்தும் அடி வழிபாடு செய்தும் பறவை காவடி மற்றும் அலகு குத்தியும், கற்பூர சட்டி ஏந்தியும், தேர் வடம் பிடித்தும், பஜனைகள் பாடிக் கொண்டு தேரோடு பக்திப் பரவசத்துடன் முருகப்பெருமானின் அரோகரா கோஷங்களை எழுப்பியவாரு தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியமையை காணக்கூடியதாக இருந்தது.

அத்துடன் நண்பகல் வேளையில் தங்கத்தேர் ஆலயத்தை வந்தடைந்ததுடன் சுவாமிக்கு பச்சை சாத்தி ஆலயத்தினுள் கொண்டு சென்று பிராயச்சித்த அபிஷேகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து அடியார்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டதோடு தங்கத்தேர் திருவிழா இனிதே நிறைவுபெற்றது.

