
செம்மணி தொடர்பில் சாட்சியமளிப்பதாக கூறிய சோமரத்ன ராஜபக்ஷவின் பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் ரோஹினி ராஜபக்ஷ
செம்மணி தொடர்பில் சாட்சியமளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்த சோமரத்ன ராஜபக்ஷவின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என சோமரத்ன ராஜபக்ஷவின் சகோதரி ,ரோஹினி ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளதாக நாளிதழ் ஒன்றின் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படும் பட்சத்தில் சாட்சியம் அளிப்பதற்குத் தயாராக இருப்பதாக சோமரத்ன ராஜபக்ஷ,தனது மனைவி எழுதிய கடிதத்தின் ஊடாக தெரிவித்திருப்பது ,அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என சோமரத்ன ராஜபக்ஷவின் சகோதரி கூறியுள்ளதாக செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதனால் அவருக்குரிய பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சோமரத்ன ராஜபக்ஷவின் சகோதரி ரோஹினி ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளாதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது .
யாழ். செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படுமானால் அதில் சாட்சியமளிப்பதற்குத் தான் தயாராக இருப்பதாக ,கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ தெரிவித்திருப்பதாக கூறி ,அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம ,ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
இதை விடயம் தொடர்பில் நேற்று பாராளுமன்றத்திலும் சுட்டிக்காட்டப்பட்டது.
யுத்தகாலத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் சித்திரவதைக்கூடங்கள் பற்றிய விபரங்களை வெளியிடுவதற்குத் தனது கணவர் தயாராக இருப்பதாக சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில் ,வெலிக்கடை சிறைச்சாலையில் இருக்கும் தனது சகோதரரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என சோமரத்ன ராஜபக்ஷவின் சகோதரி குறிப்பிட்டுள்ளார்.
இதனால் தனது சகோதரன் சோமரத்ன ராஜபக்ஷவின் பாதுகாப்பைப் பலப்படுத்துவற்கு சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ள ரோஹினி ராஜபக்ஷ, இதுகுறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளதாக நாளிதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளது .
இதேவேளை ,மரணதண்டனை விதிக்கப்பட்டு கடந்த 29 வருடகாலமாக சிறைவாசம் அனுபவித்துவரும் தனது சகோதரர் சோமரத்ன ராஜபக்ஷவுக்கு கடந்த காலங்களில் சிறைக்கு உள்ளும் வெளியில் இருந்தும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாகவும் , சில சந்தர்ப்பங்களில் அவரது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் சோமரத்ன ராஜபக்ஷவின் சகோதரி ரோஹினி ராஜபக்ஷ சுட்டிக்காட்டியதாக நாளிதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

