
அமெரிக்காவுக்கு டென்மார்க் பிரதமர் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றதிலிருந்து, அண்டை நாடுகளை வரி விதிப்புகள் மற்றும் கடுமையான கருத்துகள் மூலம் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாக சர்வதேச அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
அந்த வரிசையில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் உலக சுதந்திரத்தை பாதுகாக்க கிரீன்லாந்தின் மீது உரிமையும் கட்டுப்பாடும் அவசியம் எனக் கூறிய டிரம்ப், டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்தை வாங்க வேண்டும் என தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
கிரீன்லாந்தில் ஏராளமான கனிம வளங்கள் குவிந்து கிடப்பதாலும், சீனாவின் செல்வாக்குக்கு போட்டியாக இந்தப் பகுதியை கைப்பற்ற அமெரிக்கா விரும்புவதாகவும் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
இதனிடையே, டென்மார்க்கின் கிரீன்லாந்து பகுதிக்காக மட்டும் தனியாக அமெரிக்க தூதரை நியமித்துள்ள டிரம்ப், அந்தப் பகுதி அமெரிக்காவுக்கு நிச்சயமாக கிடைத்தாக வேண்டும் என கருத்து தெரிவித்தது, இரு நாடுகளுக்கிடையே மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், டிரம்பின் மிரட்டல்களுக்கு பதிலடி கொடுத்து பேசிய டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன்,
“கிரீன்லாந்தை வலுக்கட்டாயமாக கைப்பற்றும் அமெரிக்காவின் எந்தவொரு முயற்சியும், கடந்த 80 ஆண்டுகளாக நிலவி வரும் நேட்டோ பாதுகாப்பு கூட்டணியை சிதைக்கும். இந்த விவகாரத்தில் டென்மார்க்குக்கு ஐரோப்பா முழுவதின் ஆதரவும் உள்ளது” எனக் கடுமையாக எச்சரித்தார்.

