
T 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன
T 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அதிகமானவர்கள் எதிர்பாப்புகளுக்கு மத்தியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி, இன்று கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
உள்நாட்டு நேரப்படி இரவு 7.00 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.
இது இத்தொடரின் ‘A’ குழுவிற்கான போட்டியாக நடைபெறுகின்றது.
இன்றைய போட்டியை முன்னிட்டு விசேட பாதுகாப்புக்கு ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் ரவின் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
2000 பொலிஸ் அதிகாரிகளும், 600 போக்குவரத்து பொலிஸாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவதுடன் முப்படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே நிலவிய அரசியல் நெருக்கடியால் ,
2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் இருநாடுகளுக்கிடையிலான போட்டி நடைபெறுமா இல்லையா என்பது குறித்து கேள்வியெழுந்தது .
போட்டியில் கலந்துகொள்வதில்லை என முன்னதாக பாகிஸ்தான் தெரிவித்திருந்த போதிலும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கோரிக்கையின் அடிப்படையில் பாகிஸ்தான் விளையாடுவதற்கு தீர்மானித்தது.
இந்த போட்டிக்கான அனைத்து டிக்கட்டுக்களும் நேற்றைய தினம் விற்றுத் தீர்ந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
எனவே ரசிகர்கள் டிக்கட் வரிசையில் நிற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

