
எப்ஸ்டீன் கோப்புகள் வெளியீடு ; மன்னிப்பு கேட்ட பில் கேட்ஸ்
சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு பாலியல் சுரண்டலுக்காக வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான நீதிமன்ற ஆவணங்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன.
2019 ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட அவர், நியூயார்க் நகர சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அதே ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி தனது சிறைக் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில், லட்சக்கணக்கான பக்கங்களை கொண்ட வழக்குப் பதிவுகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஆவணங்களில் பல பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவற்றில் டொனால்டு டிரம்ப், பில் கேட்ஸ், எலான் மஸ்க் மற்றும் இளவரசர் ஆண்ட்ரு உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
இதனிடையே, எப்ஸ்டீனுடன் நடைபெற்ற சந்திப்புகளை விவரிக்கும் புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து பில் கேட்ஸைச் சுற்றி விமர்சனங்கள் எழுந்தன.
முகங்கள் மறைக்கப்பட்ட பெண்களுடன் எடுத்த புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
இந்நிலையில், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், தனது அறக்கட்டளை ஊழியர்களிடம் பொது மன்னிப்பு கோரியுள்ளார்.
அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையின்படி, சமீபத்திய “டவுன் ஹால்” கூட்டத்தின் போது, எப்ஸ்டீனுடன் கொண்டிருந்த தொடர்புகள் குறித்து எழுந்த கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். எப்ஸ்டீனுடன் நேரம் செலவிட்டதும், சில மூத்த நிர்வாகிகளை அந்தச் சந்திப்புகளில் ஈடுபடுத்தியதும் ஒரு பெரிய தவறு என அவர் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு வரை எப்ஸ்டீனைச் சந்தித்ததாகவும், தனியார் ஜெட் விமானத்தில் பயணம் செய்ததாகவும், ஜெர்மனி, பிரான்ஸ், நியூயார்க் மற்றும் வாஷிங்டன் உள்ளிட்ட இடங்களில் அவருடன் நேரம் கழித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், எப்ஸ்டீனின் தனியார் தீவுக்கு தாம் ஒருபோதும் செல்லவில்லை எனவும் அவர் உறுதிப்படுத்தியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

