ஹட்டன் பாடசாலை மாணவர்கள் மோதல் – மூன்று மாணவர்கள் கைது

ஹட்டன் பாடசாலை மாணவர்கள் மோதல் – மூன்று மாணவர்கள் கைது

ஹட்டன் பகுதியில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றின் வகுப்பறைக்குள் மாணவர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் இந்த மாணவர்கள் நேற்று (28) கைது செய்யப்பட்டதாக ஹட்டன் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

10-ஆம் தரத்தில் கல்வி பயிலும் இரு மாணவர் குழுக்களுக்கிடையே சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இந்தத் தாக்குதலில் அந்தப் பாடசாலையின் பழைய மாணவர் ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் பாடசாலை மட்டத்தில் சமரசம் செய்யப்பட்ட போதிலும், தாக்குதல் தொடர்பான காணொலி சமூக வலைத்தளங்களில் பரவியது.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவனின் தாயார் நேற்று (28) ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் இரண்டு மாணவர்கள் மற்றும் பழைய மாணவர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

தாக்குதலுக்குள்ளான மாணவர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் மூவரும் இன்று (29) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

அதன் பின்னர், நீதவான் ஊடாக சந்தேகநபர்களை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஹட்டன் தலைமையக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )