
இலங்கையின் ஆன்மீகத் தலைவருக்குஐக்கிய இராச்சியத்தின் கேன்டர்பரி கிறிஸ்ட் சர்ச் பல்கலைக்கழகம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு
உலகளாவிய ஆன்மீகத் தலைமையாகவும் சமூக சேவையாளராகவும் அங்கீகரிக்கப்பட்ட , இலங்கையின் கௌரவத்திற்குரிய பௌத்த தலைவர்களில் ஒருவரான அதி வணக்கத்திற்குரிய கலாநிதி கிரிந்தே அசாஜி தேரோவுக்கு, ஐக்கிய ராஜ்யத்தின் கேன்டர்பரி கிறிஸ்ட் சர்ச் பல்கலைக்கழகம் (Canterbury Christ Church University) அதன் மதிப்புமிக்க வாழ்நாள் சாதனையாளர் கௌரவ விருதை வழங்கியுள்ளது.

பல்கலைக்கழகத்தின் அன்செல்ம் கட்டிடத்தில் உள்ள தேவாலயத்தில் (University Chapel) நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழா, அசாஜி தேரோவின் பல்கலைக்கழகத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக அமைந்தது.
இலங்கை மற்றும் சர்வதேச அளவில் ஆன்மீகத் தலைமை, மத நல்லிணக்கம், கல்வி மற்றும் சமூக மேம்பாடு ஆகியவற்றிற்கு அவர் ஆற்றிய பல தசாப்த கால பங்களிப்பிற்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது .

கொழும்பு ஹுணுபிட்டிய கங்காராம விகாரையின் விஹாராதிபதி மற்றும் மேல் மாகாணத்தின் சங்கநாயகருமான அதி வணக்கத்திற்குரிய கலாநிதி கிரிந்தே அசாஜி, மதம் மற்றும் சமூகத் துறைகளில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமையாக நீண்ட காலமாக கருதப்படுகிறார்.
அமைதி, கருணை மற்றும் ஒற்றுமையை ஊக்குவிப்பதில் அவரது அசாதாரணமான அர்ப்பணிப்பு, அத்துடன் கிராமப்புற சமூகங்களை மேம்படுத்துதல், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் நிலையான வளர்ச்சி முயற்சிகளை முன்னெடுத்தல் ஆகியவற்றை ஆகியவற்றை கௌரவித்து இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது .
விழாவில் கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்கள்
இந்த நிகழ்வில் கல்வித்துறை தலைவர்கள், இராஜதந்திரிகள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் எனப் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

நிமல் சேனாதீர – ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர்.
கலாநிதி துலான் ஹெட்டியாராச்சி – இலங்கை சுற்றுலா மற்றும் கலாசார செயலணியின் தலைவர்.
கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி – IDM Nations Campus International நிறுவனத்தின் தலைவர்
பேராசிரியர் ராமா திருநாமச்சந்திரன் – பல்கலைக்கழக துணைவேந்தர்.
பேராசிரியர் முகமது அப்தெல்-மகித் -பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தர்.
விருதை ஏற்றுக்கொண்டு உரையாற்றிய அசாஜி தேரோ, இன்றைய பிளவுபட்ட உலகில் பௌத்த போதனைகளின் அவசியத்தை வலியுறுத்தினார்.
“உண்மையான அமைதி நமக்குள் இருந்தே தொடங்குகிறது. மனதில் அமைதி இருந்தால், உலகில் அமைதி நிலவும்.”
நவீன கல்வியுடன் தார்மீக மற்றும் ஆன்மீக விழுமியங்களை இணைப்பதன் முக்கியத்துவத்தையும் இந்த நிகழ்வில் உரையாற்றிய அசாஜி தேரோ சுட்டிக்காட்டினார்.
அசாஜி தேரோவின் இந்த விஜயம், இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான கலாசார மற்றும் கல்வி உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
இது உயர்கல்வி, சுற்றுலா, பாரம்பரிய மேம்பாடு மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான நீண்டகால ஒத்துழைப்பிற்கு ஒரு அடித்தளமாக அமையும் என்று பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
கேன்டர்பரி கிறிஸ்ட் சர்ச் பல்கலைக்கழகத்தின் இந்த அங்கீகாரம், ஆன்மீக ஞானத்தை சமூகத்தில் நடைமுறைப்படுத்துவதில் பணியாற்றும் தலைவர்களுக்கு உலக அளவில் வழங்கப்படும் மதிப்பிற்கு ஒரு சான்றாகும்.


