பல பகுதிகளுக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை

பல பகுதிகளுக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை

மேற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

அத்துடன், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவுக்கு அண்மையில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்தப் பகுதியின் தாக்கம் காரணமாக, தற்போதைய மழையுடனான வானிலை நிலைமை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது.

இதன்படி, மேற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 150 மில்லிமீற்றருக்கு அதிகமான மிகக் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் ஏனைய பகுதிகளின் சில இடங்களிலும் சுமார் 100 மில்லிமீற்றர் வரையான கனமழை பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய அபாயங்களைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வு மையம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் மலைப்பகுதிகளில் பயணிப்போர் அதிக அவதானத்துடன் இருக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )