
யாழ் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையை நேரில் சென்று பார்வையிட்ட கஜேந்திரகுமார்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த மருந்து களஞ்சியசாலையை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று விஜயம் மேற்கொண்ட அவர், வைத்தியசாலை சேவைகள் தொடர்பில் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தியுடன் கலந்துரையாடினார்.
இதனைத் தொடர்ந்து, அண்மையில் தீ விபத்துக்குள்ளான மருந்து களஞ்சியசாலையையும் பணிப்பாளருடன் இணைந்து பார்வையிட்டார்.
அத்துடன், தீ விபத்து தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள், புதிய மருந்துகள் பெற்றுவரப்படும் நடவடிக்கைகள் மற்றும் வைத்தியசாலையின் தற்போதைய தேவைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டறிந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 09ஆம் திகதி அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால், அங்கிருந்த சுமார் 60 வீதமான மருந்துகள் தீயில் எரிந்து நாசமாகியிருந்தன.
இந்த சம்பவத்தால் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துகள் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

