
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன் ஒருவர் கைது
சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு மோட்டார் சைக்கிள்களைத் தம்வசம் வைத்திருந்த ஒருவரை மத்திய குற்றப்புலனாய்வுப் பணியக அதிகாரிகள் நேற்று (16) கைது செய்துள்ளனர்.
அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மில்லினியம் சிட்டி வீட்டு தொகுதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சோதனையின் போது, தேவையான அனுமதிப்பத்திரங்கள் மற்றும் இறக்குமதி ஆவணங்கள் இன்றி நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய குற்றப்புலனாய்வுப் பணியக அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

