
சைபர் குற்றங்களுக்காக என சந்தேகிக்கப்படும் 51 லட்சம் பெறுமதியான 87 கைத்தொலைபேசிகளுடன் மூன்று சீனர்கள் கட்டுநாயக்காவில் கைது
சைபர் குற்றங்களை புரிவதற்காக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சுமார் 5.14 மில்லியன் ரூபா பெறுமதியான 87 கைபேசிகளும் 140 மின்கலங்களுடன் மூன்று சீன பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கைக்குள் சைபர் குற்றங்களைச் செய்வதற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இந்தத் தொலைபேசிகளும், அவற்றுக்குப் பயன்படுத்தப்படும் மின்கலங்களும் சுங்கப் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.
குறித்த தொலைபேசிகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வந்து, Green Channel ஊடாக வெளியேற முயன்ற போதே இந்த மூன்று சீன பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 34 வயதுடைய சீனப் பெண் ஒருவரும், 35 வயதுடைய இரண்டு சீன ஆண்களும் அடங்குவர்.
இவர்கள் சீன நாட்டின் ஷாங்காய் நகரில் இருந்து சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் (China Eastern Airlines) நிறுவனத்திற்கு சொந்தமான MU-6017 என்ற விமானம் மூலம் நேற்று மாலை 6.43 மணிக்கு இலங்கையை வந்துள்ளதுடன், ஆண் பயணி ஒருவர், தீர்வையற்ற கடைகளின் பொதியிடலில் இருந்து பெறப்பட்ட கறுப்பு நிற பொலித்தீன் பையொன்றை ஏந்தியவாறு பசுமை வழித்தடத்திற்குள் நுழைந்த போது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சந்தேகத்திற்கிடமான பையொன்றைச் சோதனையிட்ட போது, டொஃபி மற்றும் சொக்லேட்டுகளுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சில கைபேசிகள் கண்டறியப்பட்டன.
பின்னர் நடத்தப்பட்ட சோதனையின் போது, அவர் அணிந்திருந்த ஆடைக்கு அடியில் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட ஜாக்கெட் ஒன்றிற்குள்ளும், அவருக்கு பின்னால் வந்த சீனப் பெண் அணிந்திருந்த காலணியின் உறைக்குள்ளும் மற்றும் மற்றைய சீனப் பயணியின் பயணப் பையிலும் இருந்து 87 கைபேசிகளும் அவற்றுக்கான 140 மின்கலங்களும் கண்டெடுக்கப்பட்டன.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இம்மூவரையும் காவலில் வைத்துள்ளதோடு, இது குறித்த மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக அவர்களை சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

