
காசா நகரத்தைக் கைப்பற்றும் அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக இஸ்ரேலில் வலுக்கும் போராட்டங்கள்
காசா நகரை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு எதிராக டெல் அவிவில் பல போராட்டங்கள் தொடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பணயக்கைதிகளின் குடும்பங்கள் உட்பட சுமார் 100,000 போராட்டக்காரர்கள் போராட்டத்தில் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசா நகரை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து அந்நாட்டு மக்கள்
இஸ்ரேலிய அரசாங்கத்தை உடனடியாக விரோதப் போக்கை நிறுத்துமாறு கோரி இந்த போராட்டத்தை மேற்கொண்டனர்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பாலஸ்தீனத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளின் புகைப்படங்களையும் ஏந்தி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டிற்கு அருகில் போராட்டக்காரர்கள் கூடியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போராட்டக்காரர்கள், போரை நிறுத்துமாறும், பணயக்கைதிகளின் உயிரைப் பாதுகாக்கவும் கோரி, பதாகைகளை ஏந்தி இஸ்ரேலிய பிரதமரின் இல்லத்தை நோக்கி பேரணி நடத்தினர்.
நெதன்யாகுவின் முடிவுக்கு எதிராக இஸ்ரேலின் பல பகுதிகளில் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசாவில் போரை தீவிரமாகும் இஸ்ரேலின் முடிவிற்கு ஐக்கிய நாடுகள் சபை , ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் கனடா உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன , ஜெர்மனி இஸ்ரேலுக்கான இராணுவ உதவியை நிறுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.

