
”செப்டம்பர் வரை மின்கட்டணம் உயராது” ; அமைச்சர் அருண கருணாதிலக
எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்காக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் எந்தவொரு கோரிக்கையும் விடுக்கப்படாது என துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் அருண கருணாதிலக தெரிவித்துள்ளார்.
இன்று (21) பாராளுமன்றத்தில் ரவி கருணாநாயக்க எழுப்பிய வாய்மொழிக் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.
கடைசியாக மேற்கொள்ளப்பட்ட மின்சாரக் கட்டண திருத்தத்தின் நேரடி தாக்கம், மாதாந்தம் 180 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு மட்டுமே ஏற்படும் என அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, ஏனைய நுகர்வோரின் சுமையை குறைக்கும் நோக்கில் அரசாங்கம் 15 பில்லியன் ரூபாய் மானியத்தை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், டொலரின் பெறுமதி உயர்வு மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றநிலை காரணமாக மின்சாரக் கட்டணம் மீண்டும் அதிகரிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தற்போதைய சூழ்நிலையில் மின்கட்டண உயர்வு தொடர்பான கோரிக்கையை முன்வைக்கும் திட்டம் அரசாங்கத்துக்கு இல்லை எனத் தெரிவித்தார்.
“நாங்கள் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் செப்டம்பர் மாதம் வரை மின்கட்டண உயர்வுக்கான கோரிக்கையை முன்வைப்போம் என்று எதிர்பார்க்கவில்லை,” என அமைச்சர் அருணா கருணாதிலக மேலும் கூறினார்.

