
சுவற்றில் டேப் மூலம் ஒட்டப்பட்ட வாழைப்பழம்; பல கோடிக்கு விலைக்கு வாங்கி சாப்பிட்ட நபர்
சீனாவை பூர்வீகமாக கொண்ட கிரிப்டோகரன்சி தொழிலதிபர் ஒருவர் கடந்த வாரம் 6.2 மில்லியன் டொலருக்கு ஒரு வாழைப்பழ கலைப்படைப்பை வாங்கி பிரபலமடைந்தார்.
அவர் அந்த வாழைப்பழத்தை சாப்பிடுவதாக கொடுத்த வாக்கை தற்போது நிறைவேற்றியுள்ளார்.
நியூயோர்க்கில் உள்ள சதபி ஏல மையத்தில் நடைபெற்ற ஏலத்தில் மவுரிசியோ கேட்டலான் என்ற கலைஞரின் ‘காமெடியன்’ என்று பெயரிடப்பட்ட கலைப்படைப்பு வைக்கப்பட்டது. அது சுவற்றில் டேப் மூலம் ஒட்டப்பட்ட ஒரு வாழைப்பழம்.

இந்த கலைப்படைப்பை வாங்க 7 பேர் ஏலத்தில் பங்கேற்றனர். அதில் தொழிலதிபர் ஜஸ்டின் சன் ஆறு பேரை மிஞ்சி அந்த ஒற்றை வாழைப்பழத்தை தன்வசப்படுத்தினார்.
இந்நிலையில் ஹாங்காங்கில் நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், கலை மற்றும் கிரிப்டோகரன்சி பற்றி பேசுகையில் ஜஸ்டின் சன் அந்த வாழைப்பழத்தை சாப்பிட்டார்.
ஒவ்வொரு முறையும் இந்த கலைப்படைப்பு காட்சிப்படுத்துவதற்கு முன்னதாக வாழைப்பழம் மாற்றி வைக்கப்படும்.

இனி இந்த கலைப்படைப்பை காட்சிப்படுத்தும் உரிமையுடன், பழத்தை எவ்வாறு மாற்றுவது என்பது குறித்த வழிகாட்டுதலையும் சன் பெற்றிருக்கிறார்.
இந்த கலைப்படைப்பில் வைக்கப்படும் வாழைப்பழம் இதற்கு முன்பு இரு முறை சாப்பிடப்பட்டுள்ளது
2019 இல் ஒரு கலைஞரும், 2023 இல் தென் கொரிய மாணவர் ஒருவரும் இந்த வாழைப்பழத்தை சாப்பிட்டனர். ஆனால் அவர்கள் பணம் எதுவும் செலுத்தவில்லை.
”பத்திரிகையாளர் சந்திப்பில் இதை சாப்பிடுவதும் இந்த கலைப்படைப்பின் வரலாற்றில் இடம்பெறும். மற்ற வாழைப்பழங்களை விட இது எனக்கு சுவையாக இருந்தது” என்று ஜஸ்டின் சன் தெரிவித்துள்ளார்.
34 வயதான சன் இந்த கலைப்படைப்பு தன்னை மிகவும் கவர்ந்ததாக கூறினார். இருப்பினும், இந்த வாழைப்பழம் ஒரு வேலை அழுகி இருக்குமோ என்னும் கேள்வி தனக்குள் இருந்ததையும் அவர் ஒப்புக் கொண்டார்.
இந்த வாழைப்பழம் உலகின் மிக விலையுயர்ந்த பழமாக ஏலம் எடுக்கப்பட்ட அந்த நாள், 35 சென்டுக்கு ஒரு புதிய பழம் வாங்கி வைக்கப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் நினைவுப் பரிசாக ஒரு வாழைப்பழமும் ஒரு டேப் ரோலும் வழங்கப்பட்டது.