
தனியார் வாகன இறக்குமதி அடுத்த வருடம் பெப்ரவரி முதலாம் திகதி ஆரம்பமாகும்
தனியார் வாகன இறக்குமதி அடுத்த வருடம் பெப்ரவரி முதலாம் திகதி ஆரம்பமாகும் எனவும் அதற்குரிய திட்ட ஏற்பாடுகள் நடப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (18) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர், “தொழில் செய்யும்போது ஒருவர் ஒரு இலட்சம் ரூபாவுக்கு செலுத்தவேண்டிய வருமான வரி மட்டத்தை ஒரு இலட்சம் ரூபாவிலிருந்து ஒன்றரை இலட்சம் ரூபா வரை அதிகரிக்க சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.
அதேபோன்று, 6 சதவீத வரிக்கு உட்படும் வகையில் தனி நபர் வருமான வரியின் முதலாவது பிரிவை 500,000 ரூபாவிலிருந்து 10 இலட்சம் ரூபா வரை திருத்தியமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அதற்கமைய, மாதந்தம் 250,000 ரூபா வருமானம் பெறும் ஒருவரின் வரி 61 சதவீதத்தால் விடுவிக்கப்படும். 300,000 வருமானம் பெறும் ஒருவரின் வரி 47 சதவீதத்தால் விடுவிக்கப்படும். 350,000 வருமானம் பெறும் ஒருவரின் வரி 25.5 சதவீதத்தால் விடுவிக்கப்படும்.
மேலும், வெளிநாட்டு கையிருப்பை 15.1 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம்.
2028ஆம் ஆண்டு நாடு வங்குரோத்து அடையுமென ஒரு சிலர் கூறுகிறார்கள். ஆனால் 2028 ஆம் ஆண்டாகும் போதும் எங்களது அரசாங்கமே இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.
அத்துடன், 2022- 2023ஆம் ஆண்டுகளில் இடம்பெற்றது போன்றதொரு நிலைமை மீண்டும் நாட்டில் ஏற்படாது.” என ஜனாதிபதி மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.