
வடக்குக்கு ஒதுக்கப்படும் நிதி யாழ்.மாவட்டத்துக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் வன்னிக்கும் வரவேண்டும்
வரவு – செலவுத் திட்டத்தில் வடக்குக்கு ஒதுக்கப்படும் நிதி, யாழ்.மாவட்டத்துக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் வன்னிக்கும் வரவேண்டும் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற பாதீடுமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர், ” வெளிநாட்டு தூதுவர்களாக இருக்கலாம், அமைச்சர்களாக இருக்கலாம், ஜனாதிபதியாக இருக்கலாம். வடக்குக்கென வரும்போது யாழில்தான் முகாமிடுகின்றனர்.
வடக்கு என்பது ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கியது. எனினும், வன்னிக்கு பெரிதாக எவரும் வருவதில்லை. தேர்தல் காலங்களில் வரும்சூழ்நிலை காணப்படுகின்றது. எனவே, வன்னி தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
பாதீட்டில் வடக்குக்கு ஒதுக்கப்பட்டுள்ள பாரிய அளவான நிதி வன்னிக்கு வருமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது? ” – எனவும் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்துக்கு நிதி ஒதுக்கவேண்டாம் எனக் கூறவில்லை. ஒதுக்கப்படும் நிதி ஏனைய மாவட்டங்களுக்கும் வர வேண்டும் என்பதே எனது கோரிக்கை. உள்ளாட்சிசபைத் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி வன்னிக்கும் வரவேண்டும் என அழைப்புவிடுக்கின்றேன்.” என தெரிவித்துள்ளார்.