நெதர்லாந்து தூதுவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

நெதர்லாந்து தூதுவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

இலங்கையின் துறைமுகங்களை அண்மித்த முதலீடுகளுக்கு நெதர்லாந்து தயாராக உள்ளதென இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோர்பஷ் (Bonnie Horbach) தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோர்பஷ் (Bonnie Horbach) ஆகியோருக்கு இடையில் இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டது.

இலங்கை மற்றும் நெதர்லாந்துக்கு இடையில் காணப்படும் நீண்டகால நட்புறவை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கையின் சுற்றுலா, துறைமுகம், முதலீட்டு துறைகளின் முன்னேற்றத்துக்கு நெதர்லாந்து அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொடுக்கக் கூடிய ஒத்துழைப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் கலாச்சார மற்றும் தொல்லியல் பெறுமதியான படைப்புக்களை பாதுகாத்தல் , கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஆய்வுகள் மற்றும் இலங்கையின் கல்வி மற்றும் பயிற்சிகளுக்கு நெதர்லாந்து அரசாங்கத்தின் ஒத்துழைப்பை வழங்கவும் இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சுற்றுலா, துறைமுக செயற்பாடுகள் மற்றும் முதலீடுகளில் நெதர்லாந்து அரசாங்கத்தின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

இம்முறை வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதியின் முன்மொழிவுகளை பாராட்டிய தூதுவர் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தை புதிய நிலைக்கு கொண்டுச் செல்ல நெதர்லாந்து அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, நெதர்லாந்து பிரதி தூதுவர் இவான் ரூஜெனஸ் ( Iwan Rutjens), நெதர்லாந்து தூதரகத்தின் அரசியல் அலுவல்கள் தொடர்பான கொள்கை அதிகாரி நாமல் பெரேரா உள்ளிட்டவர்களும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)