
நாட்டின் தேசிய பாதுகாப்பை அரசாங்கம் ஒருபோதும் குறைத்து மதிப்பிடவில்லை
நாட்டின் தேசிய பாதுகாப்பை அரசாங்கம் ஒருபோதும் குறைத்து மதிப்பிடவில்லை என்றும் அதற்கான தீர்மானங்கள் முறையாக நடை முறைப்படுவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் தலைமையில் தேசிய பாதுகாப்புச் சபை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை கூடுகிறது. இங்கு மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள், முறையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
கைது செய்யப்படும் சந்தேக நபர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
விசேட சுற்றறிக்கைக்கு இணங்க இதற்கான நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர், ”சட்டத்தின் ஆட்சி, வெளிப்படைத்தன்மை,சுயாதீனம் மற்றும் மக்கள் நம்பிக்கை உள்ளிட்ட அடிப்படை கொள்கைகளுக்கு அமைவாகவே அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.
அரசாங்கம் தமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இதனை குறிப்பிட்டுள்ளது.கடந்த இரண்டு வாரங்களில் நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற பல துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பொதுமக்களின் அன்றாட வாழ்வில் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
கடந்த 2024 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 12 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
குற்றச் செயல்களை குறைப்பதற்காக தற்போதைய அரசாங்கத்தினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.நாடளாவிய ரீதியில் பாதுகாப்புக்காக முப்படையினரும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் பொலிஸ் நடமாடும் சேவைகளும் அமுல்படுத்தப்பட்டுள்ளன.” என தெரிவித்துள்ளார்.