
தொடர்ந்தும் இந்த அரசாங்கம் ஏமாற்றும் வேளையையே செய்து வருகின்றது
கடந்த இரண்டு தேர்தல்களிலும் பொய்களை கூறி, மக்களை ஏமாற்றியே வெற்றி பெற்று, இன்று எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர் உடன்படிக்கையின்படி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய சதவீதத்தை ஒருதலைப்பட்சமாக மீறுவதால் மக்களும் வர்த்தகர்களும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு இந்த நெருக்கடி பாதீப்பை ஏற்படுத்தாது. ஆனால் சாதாரண மக்களே இவற்றுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இது இவ்வாறே போனால், பெட்ரோல் நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைவதுடன், அரச நிறுவனங்களுக்குக் கடனாக வழங்கப்பட்டு வரும் எரிபொருளும் நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இவற்றைச் செய்ய முடியாத அரசாங்கமே நாட்டில் காணப்படுகின்றது.
இந்த அரசாங்கத்தால் நாட்டை ஆள முடியாது. நாட்டை ஆளும் சரியான தொலைநோக்கு இவர்களிடம் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அநுராம்புரம், நொச்சியாகம சமனல ஹோட்டலில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இன்றும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. மனித – காட்டு யானை மோதலுக்கு புதிய தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை.
பயிர் சேதம் மற்றும் சொத்து சேதங்களுக்கான இழப்பீடுகள் இன்னும் வழங்கப்படவில்லை. எதிர்க்கட்சியில் இருந்த போது விவசாயிகளுக்கு 150 ரூபாய் உத்தரவாத விலை தருவதாக கூறினர், அது இன்னும் வழங்கப்படவில்லை. தற்போது அரசாங்கம் உத்தரவாத விலை 120 ரூபாய் என கூறி வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
விவசாய இயந்திரங்களின் விலை அதிகரித்துள்ளன. உரங்கள், களைக்கொல்லிகள், கிருமி நாசினிகள் மற்றும் உரங்கள் சரியாக கிடைப்பதில்லை. இப்பிரச்சினைகளால் நெல்லுக்கு உத்தரவாத விலையும் வழங்காதிருக்கின்றனர் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.