
4,255 கடலட்டைகளுடன் 17 பேர் கைது
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட 4,255 கடலட்டைகளுடன் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தை அண்மித்த கடற்பரப்பில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர், இரவு வேளையில் சட்டவிரோதமான முறையில், சுழியோடி கடலட்டை பிடித்த குற்றச்சாட்டில் 17 பேரையும் கைது செய்தனர்.
அவர்கள் கடலுக்கு கொண்டு சென்ற 4 படகுகள், சுழியோடி உபகரணங்கள், பிடிக்கப்பட்ட 4,255 கடலட்டைகள் என்பவற்றையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்டவர்கள், மணியத்தோட்டம், உதயபுரம், குருநகர் மற்றும் அரியாலை ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் அவர்கள் 21 முதல் 56 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களையும், மீட்கப்பட்ட பொருட்களையும் மேலதிக சட்ட நடடிக்கைக்காக யாழ்ப்பாண நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

