
நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால் அது உண்மையின் அடிப்படையிலேயே ஏற்படுத்தப்பட வேண்டும்
“உண்மையைக் கண்டறிவதைக்கூட ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனத் தேசிய மக்கள் சக்தி அரசு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் சொல்லியிருப்பதை எமது மக்கள் அவதானத்துடன் பார்க்க வேண்டும். உள்நாட்டுப் பொறிமுறையில் எமக்கு நம்பிக்கை இல்லை. சர்வதேச ஈடுபாட்டுடன் உண்மையைக் கண்டறியும் பொறிமுறை ஏற்படுத்தப்பட வேண்டும்.” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அவர் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
மேலும் அவர் , “ஜெனிவா அமர்வின் ஆரம்பத்தில் பெப்ரவரி 25 அன்றும் நேற்றைய தினமும் இலங்கைக்கான பிரதிநிதி இலங்கையின் நிலைப்பாடு தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இவற்றிலே ஐ.நாவின் இத்தனை ஆண்டுகால முயற்சி அதாவது 2012 ஆம் ஆண்டு முதல் இலங்கையிலே பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு எடுத்துள்ள முயற்சிகளுக்குத் தடை செய்கின்ற வகையிலான கூற்றுக்கள் தற்போது வெளிவருகின்றன.
கடந்த காலங்களில் இருந்த அரசுகளைப் போலவே 2015இல் மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராக இருந்தபோது மட்டும்தான் ஜெனிவாவில் இலங்கையும் சேர்ந்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இதன் பின்பு 30/1 என்ற தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்ள மாட்டாது என்ற கையோடு புதிய அரசு நல்லிணக்கம் சம்பந்தமான பல விடயங்களை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஊடாகக் கூறியுள்ளது.
ஐ.நா. சபையுடன் நாம் இணங்கிச் செயற்படுவோம் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாட்டுக்கு உருவாக்கப்பட்ட அலுவலகம் ஆகிய மூன்றையும் பலப்படுத்தி அதன் மூலம் நல்லிணக்கப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதன் மூலமாக இந்த நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று அவர் சொல்லியிருக்கின்றார்.
மீள நிகழாமைக்கு என 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வெளிவிவகார அமைச்சர் சொன்னது ஒரு புதிய அரசமைப்பு தொடர்பானது. அது தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாகக் கூறப்பட்டதோடு இந்த அரசும் பதவிக்கு வருவதற்கு முன்னர் மிகத் தெளிவாக புதிய அரசமைப்பு எனத் தெரிவித்துள்ளார்கள்.
இருந்தபோதும் இந்தக் கூட்டத் தொடரில் அவர்கள் எதையுமே கூறவில்லை. மாறாக அவர்கள் சொன்ன நிறுவனங்களுக்குக் கூட 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்திலே போதிய ஒதுக்கீடுகள் செய்யப்படவில்லை.
பேச்சளவில் அன்றி நிதி ஒதுக்கீட்டிலேதான் இவை தெரியவரும். ஆனால், இந்த நிறுவனங்களுக்குப் போதுமான நிதி ஒதுக்கீடு கொடுக்கப்படவில்லை.
இதேநேரம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முற்று முழுதாக நீக்குவோம் என வாக்குறுதியளித்த இந்த அரசு தற்போது அதற்குப் பதிலாக வேறு ஒரு சட்டத்தை இயற்றுகின்றோம் என்று சொல்லுகின்றார்கள். இவர்கள்தான் கடந்த காலத்தில் நாம் எந்தவிதமான மாற்றீடையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம், பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றுமுழுதாக நீக்கப்பட வேண்டும் என்ற ஒரு கொள்கை நிலைப்பாட்டில் இருந்தவர்கள்.
ஐ.நாவில் நேற்றைய தினம் இலங்கைப் பிரதிநிதி சமர்ப்பித்த அறிக்கையிலே மிக முக்கியமான ஒரு விடயம் உண்டு. அதற்காகவே இன்றைய அவசர சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
சாட்சியங்களைச் சேகரிப்பதற்கான ஒரு பொறிமுறை தற்போது ஐ.நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தின் பிரகாரம் மனித உரிமை உயர் ஸ்தானிகரின் அலுவலகத்தினாலே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இது மிக, மிக முக்கியமானது. அதாவது போர்க் காலத்திலே இடம்பெற்ற சட்டவிரோத செயற்பாடுகள், மனித உரிமை மீறல்கள், சர்வதேச சட்டங்களை மீறிய சம்பவங்கள் தொடர்பாக இலங்கையில் எதுவுமே நடக்கவில்லை.
போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் முடிவடைந்து விட்டன. இந்தச் சாட்சியங்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு அமைவாக அந்தச் செயற்பாடுகள் நடந்துகொண்டு இருக்கின்றன.
அதை தாங்கள் நிராகரிப்பதாக இலங்கை அரசின் சார்பில் நேற்றைய தினம் சொல்லப்பட்டுள்ளது. இது மிக, மிக மோசமான செயற்பாடு. நடந்த உண்மைகளைச் சேகரிப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, உண்மையாக இடம்பெற்றது என்பதை அறிவதில் எமக்கு ஆர்வம் இல்லை அல்லது அது மூடி மறைக்கப்பட வேண்டும் என்ற தோரணையில் இந்தப் புதிய அரசும் செயல்படுகின்றது.
நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால் அது உண்மையின் அடிப்படையிலேயே ஏற்படுத்தப்பட வேண்டும். உண்மையை மறைத்து எங்கேயும், எப்போதும் நல்லிணக்கம் ஏற்படப்போவதில்லை.
வடக்கு, கிழக்கு மக்களின் ஆணை இருப்பதாகக் கூறிக்கொண்டு அந்த வடக்கு, கிழக்கு மக்களின் முக்கிய கோரிக்கை பொறுப்புக்கூறல் சம்பந்தமான கோரிக்கை மனித உரிமை பேரவையில் இவ்வளவு காலமாக இந்த தீர்மானங்களை, சாட்சியங்களைச் சேகரிக்கும் பணி நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.
ஆகவே, இதை நீர்த்துப் போகும் வண்ணம் நாங்கள் எதிரானவர்கள் என்ற கூற்றை முற்று முழுதாக நிராகரிக்கின்றோம். அரசின் இந்த செயற்பாடு தமிழ் மக்களின் அபிலாஷையை மூடி மறைப்பதாக உள்ளது.
இதேநேரம் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களும் இந்த அரசு உண்மையைக் கண்டறிவதைக்கூட ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனச் சொல்லியிருப்பதை அவதானத்துடன் பார்க்க வேண்டும்.
உள்நாட்டுப் பொறிமுறையில் எமக்கு நம்பிக்கை இல்லை. சர்வதேச ஈடுபாட்டுடன் உண்மை கண்டறியப்படும் பொறிமுறை ஏற்படுத்தப்பட வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.