
ரமலான் மாதம் இஸ்லாமியர்களுக்கு ஏன் முக்கியமானது ?
முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆன் முதன்முதலில் இறைத்தூதர் முகமது நபிக்கு வெளிப்படுத்தப்பட்டதைக் குறிக்கும் விதமாக, ரமலான் மாதம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்த மாதத்தின் லைலத்துல் கத்ர் எனும் இரவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் வெளிப்படுத்தப்பட்டது என இஸ்லாமிய அறிஞர்கள் கூறினாலும், அது குறிப்பாக எந்த நாள் என்பது தெரியவில்லை. ஆனால், ரமலான் மாதத்தின் 27வது இரவு இஸ்லாமியர்களால் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அன்று சிறப்பு தொழுகைகளும் நடைபெறும்.
இஸ்லாம் மதத்தின் வரலாற்றில் முக்கிய போராக கருதப்படும் பதுருப் போரும் (கி.பி. 624) ரமலான் மாதத்தில் தான் நடைபெற்றது.
“ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.” என்று இஸ்லாமியர்களின் ஹதீஸ் (புகாரி- 1899) எனப்படும் தொகுப்பில் கூறப்பட்டுள்ளது.
பல முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில், முடிந்தவரை குர்ஆனைப் படித்து முடிக்க முயற்சிப்பார்கள். ஆன்மீக சிந்தனை, தொழுகை, ஏழைகளுக்கு உதவுதல் போன்ற நல்ல செயல்களைச் செய்தல் மற்றும் குடும்பத்தினர், நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவதற்கான மாதமாகவும் ரமலான் கருதப்படுகிறது.