
அநுராதபுரத்தில் 47 CCTV கெமராக்கள் செயலிழப்பு
அநுராதபுரம் நகரத்தின் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி அமைப்பில் 47 கெமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், அவை அனைத்தும் தற்போது செயலிழந்துள்ளதாக பிரதேச மக்களும் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக நகரில் இடம்பெறும் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலைக் கண்டறியும் வாய்ப்பும் இழக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2017 ஆம் ஆண்டில் அனுராதபுரம், ஹபரணை மற்றும் பொலன்னறுவை ஆகிய நகரங்களின் பாதுகாப்பிற்காக 7 மில்லியன் ரூபா செலவில் சி.சி.ரி.வி அமைப்புகளை நிறுவ வடமத்திய மாகாணசபை நடவடிக்கை எடுத்திருந்தது.
அனுராதபுரம் நகரம் சுற்றுலாப் பயணிகளால் தொடர்ந்து பார்வையிடப்படும் நகரமாக இருப்பதால், அதன் பாதுகாப்பை உறுதி செய்வது அதிகாரிகளின் பொறுப்பாகும்.
இருப்பினும், சி.சி.ரி.வி கெமரா அமைப்பின் செயலிழப்பானது அனுராதபுரம் நகரின் பாதுகாப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள், சட்டத்தரணிகள் மற்றும் அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து வடமத்திய மாகாண ஆளுநரிடம் விசாரித்தபோது,
“நாங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை அழைத்தோம். தற்போதைய சி.சி.ரி.வி அமைப்பை சரிசெய்ய முடியாது என்று அவர்கள் கூறினர். ஒப்பந்த காலம் நிறைவடைந்துவிட்டதாக தெரிவித்தனர். புதிய சி.சி.ரி.வி அமைப்பை நிறுவுவதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர். ஆனால் இதுவரை எந்த முன்மொழிவுகளும் பெறப்படவில்லை. ஆனால் இதை மிக விரைவில் செயல்படுத்துவோம் என்று நம்புகிறோம்.” என தெரிவித்துள்ளார்.