
இலங்கை – பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் சாவித்ரி சரோஜா போல்ராஜ் தெரிவு
பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் சாவித்ரி சரோஜா போல்ராஜ் தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கை – பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் 2025.03.21 ஆம் திகதி சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இத்தெரிவு இடம்பெற்றது.
இலங்கைக்கான பிரான்ஸ் பிரதித் தூதுவர் (Charge d affaires) மேரி-நோயல் டூரிஸ் (Marie-Noelle Duris) அவர்களும் இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அத்துடன், இலங்கை – பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் செயலாளராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லால் பிரேமநாத் தெரிவுசெய்யப்பட்டார்.
இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கிடையில் 75 வருடங்களாக காணப்படும் இரு தரப்பு உறவுகளை நினைவுகூர்ந்த அவர் இந்த தொடர்புகளை விருத்தி செய்து கொள்வதற்கு நட்புறவுச் சங்கம் முக்கியமான தளமாகும் எனச் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இரு தரப்பினருக்கும் உயர்ந்த நன்மைகளைப் பெறுவதற்கு சுற்றுலா, முதலீடு, கல்வி, கடல்சார் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம், சட்டம் போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கு நெருக்கமாகச் செயற்படுவதன் முக்கியத்துவத்தை சபாநாயகர் வலியறுத்தினார்.
அத்துடன், இலங்கைக்கான பிரான்ஸ் பிரதித் தூதுவர் மேரி-நோயல் டூரிஸ் (Marie-Noelle Duris) இங்கு உரையாற்றுகையில், இந்த நட்புறவுச் சங்கத்தின் ஊடாக இரு நாடுகளுக்கு இடையிலான நட்புரீதியான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
மேலும், பிரான்ஸ் பாராளுமன்றத்தின் பிரான்ஸ் – இலங்கை நட்புறவுச் சங்கத்தின் தலைவர் திருமதி சுவியூ புஹுவா உள்ளிட்ட குழுவினர் இலங்கை பாராளுமன்றத்தின் பிரதிநிதிகளை சந்திப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதற்கமைய, இலங்கை – பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் புதிய உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த அவர், இரு நாடுகளும் கலாசார, கல்வி, சுற்றுலா, பொருளாதரம், பெண்களின் உரிமைகள், பால்நிலை மற்றும் மனித உரிமைகள் போன்ற துறைகளில் பரஸ்பர புரிதலுடன் செயற்பட முடியும் எனத் தெரிவித்தார்.
நட்புறவுச் சங்கத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டமைக்கு நன்றி தெரிவித்த கௌரவ அமைச்சர் சாவித்ரி சரோஜா போல்ராஜ், 75 வருடங்களாக இலங்கைக்காக பிரான்ஸ் வழங்கிய நட்புரீதியான இராஜதந்திர ஒத்துழைப்புக்களைப் பாராட்டினார்.
விசேடமாக, கல்வி, கலாசாரம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் இலங்கை – பிரான்ஸ் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்த ஒன்றிணைந்து செயற்படுமாறு அவர் அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.
இதன்போது நன்றியுரை நிகழ்த்திய நட்புறவுச்சங்கத்தின் செயலாளர் பராளுமன்ற உறுப்பினர் லால் பிரேமநாத், இந்த நட்புறவுச் சங்கத்தின் ஊடாக பிரான்சுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்ட கால நட்புறவை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பதவியணிப் பிரதானியும் பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.