யாழ்ப்பாணத்து மக்களே போரை மறந்துவிட்டனர்

யாழ்ப்பாணத்து மக்களே போரை மறந்துவிட்டனர்

“யாழ்ப்பாணத்து மக்களே போரை மறந்து சிங்கள தலைவர்கள் உள்ள அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ள சூழ்நிலையில், படையினரை இலக்கு வைத்து பிரிட்டன் தடைகளை விதிப்பதன் நோக்க என்ன, இதன் பின்னணியில் செயற்படுவது யார்?” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

போலியான போர்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்து படையினருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் இடமளிக்கப்படவில்லை எனவும், தற்போது அதற்குரிய முயற்சி எடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தல் நேற்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் ”மூன்று படைத்தளபதிகள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட இலங்கையர்கள் நால்வருக்கு பிரிட்டனால் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

சிவில் போரின்போது மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டன, சட்டத்துக்கு புறம்பான படுகொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட காரணங்களுக்காகவே இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

புலிகள்தான் உலகில் உள்ள பயங்கரமான பயங்கரவாத அமைப்பாகும். இப்படிபட்ட ஒரு அமைப்புடன் போரிட்டு வெற்றிபெறுவதற்கு பங்களிப்பு செய்த படையினர் குறிவைக்கப்பட்டுள்ளனர்.

போர் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ளன. யாழ்ப்பாணத்து மக்களே போரை மறந்து, சிங்கள தலைவர்கள் உள்ள அரசாங்கத்தக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

இப்படியான சூழு;நிலையில் மீண்டும் இப்படியொரு சம்பவம் இடம்பெறுவது ஏன்? இதன் பின்னணியில் இருப்பவர்கள், ஒத்துழைப்பு வழங்குபவர்கள் யார் என்ற பிரச்சினையும் எமக்கு உள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாட்டை பிரிட்டனுக்கும், சர்வதேசத்தக்கும் ஜனாதிபதி வழங்க வேண்டும்.

மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் படையினருக்கு எதிராக போலியாக போர்க்குற்றச்சாட்டுகளை சுமத்தி அவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இடமளிக்கப்படவில்லை.

தற்போது அதற்குரிய முயற்சி மீண்டும் இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது. போரை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டிய படையினருக்காக நாம் என்றும் முன்னிற்போம்.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )