
அநுர குமாரவின் நடவடிக்கைகளிளும் கோட்டாபய ராஜபக்ஷவின் நடவடிக்கைகளிளும் எந்த வித்தியாசமும் இல்லை
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, முன்னாள் பிரதம நீதியரசரை தூதராக நியமித்தமை நீதித்துறையின் மீது மறைமுக செல்வாக்கு செலுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு சேவைகளுக்கான நியமனங்கள் வெளிநாட்டு சேவையில் உள்ள அதிகாரிகளுக்கு வழங்கப்படுவதாக கொள்கை அறிக்கையில் கூறப்பட்டாலும், அரசாங்கம் தற்போது அந்தக் கொள்கைகள் அனைத்தையும் மீறி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ முன்னாள் பிரதம நீதியரசர் மோகன் பிரிசாவுக்கும் ஒரு தூதர் பதவியை வழங்கியதாகவும், இன்று அநுர குமாரவின் நடவடிக்கைகளிளும் கோட்டாபய ராஜபக்ஷவின் நடவடிக்கைகளிளும் எந்த வித்தியாசமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இராஜதந்திர சேவைக்கு 14 புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த நியமனங்களில் ஒருவர் மட்டுமே வெளிநாட்டு சேவையில் உள்ளதாகவும், தேசிய மக்கள் சக்தியில் கொழும்பிலிருந்து போட்டியிட்டு தோல்வியடைந்த ஒருவருக்கு தூதர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அரசாங்கம் அமைப்பை மாற்றியமைத்து வருவதாகக் கூறினாலும், எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும், தற்போதைய ஜனாதிபதி முந்தைய ஜனாதிபதிகள் செய்ததையே செய்கிறார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.