
அமெரிக்கா இலங்கைக்கு நன்கொடையாகவழங்கிய P628 கப்பல்நேற்று புறப்பட்டு 77 நாட்களின் பின்னர் இலங்கைக்கு
இலங்கைக்கு புறப்பட்ட அமெரிக்காவினால் நன்கொடை வழங்கப்பட்ட நான்காவது கப்பல் தொடர்பான சுவாரஷ்யமான சில விபரங்கள்
…………………………………….
இலங்கை கடற்படை வரலாற்றில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லை எட்டும் வகையில், அமெரிக்காவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நான்காவது கடலோரக் காவல்படை கப்பல், அமெரிக்காவின் பால்டிமோர் (Baltimore) துறைமுகத்திலிருந்து இலங்கையை நோக்கிப் பயணத்தை ஆரம்பித்துள்ளது.
முன்பு அமெரிக்க கடலோரக் காவல்படையின் ‘Decisive’ என அழைக்கப்பட்ட இக்கப்பல், தற்போது P628 என பெயரிடப்பட்டுள்ளது.
இக்கப்பல் மொத்தம் 14,775 கடல் மைல் தூரத்தை கடக்கவுள்ளது.
இது இலங்கைக் கடற்படைக் கப்பல் ஒன்றினால் மேற்கொள்ளப்படும் மிக நீண்ட தனி கடல் பயணமாக (Single sea voyage) அமையும்.
இன்று புறப்பட்ட கப்பல் 77 நாட்கள் பயணத்தின் பின்னர், எதிர்வரும் 2026 மே 8 அன்று திருகோணமலையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைக் கடற்படை வரலாற்றில் பனாமா கால்வாய் (Panama Canal) ஊடாக பயணிக்கும் முதல் கப்பலாக இது வரலாற்றுப் பதிவை ஏற்படுத்தவுள்ளது.
இந்தச் சாதனையானது இலங்கைக் கடற்படையின் முன்னேறிய கடல்சார் திறன்களை வெளிப்படுத்துவதுடன், இவ்வாறான சிக்கலான கடல்சார் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச ரீதியாகக் கிடைக்கும் ஒத்துழைப்பையும் உறுதிப்படுத்துகிறது.
கேப்டன் கயான் விக்ரமசூரிய தலைமையில் 14 அதிகாரிகள் மற்றும் 72 மாலுமிகள் என மொத்தம் 86 பேர் இக்கப்பலில் பயணிக்கின்றனர்.
இக்கப்பல் இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் (EEZ) கடல் கண்காணிப்பு, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் கடல் வழிப்பாதைகளின் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படவுள்ளது.
அமெரிக்காவின் மேலதிக பாதுகாப்பு தளபாடங்கள் (Excess Defense Articles) திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நான்காவது கப்பல் இதுவாகும்.
இதன் மூலம் இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஆழமான கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வு பிரதிபலிக்கிறது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

