
பல பகுதிகளில் பேருந்து சேவைகளில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது
இன்று (23) சில பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும், பல பகுதிகளில் பேருந்து சேவைகளில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலன் மிராண்டா தெரிவித்துள்ளார்.
அதிவேகச் சாலைகளில் பேருந்து சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் சாதாரண சாலைகள் வழியாகப் பயணிக்க வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான அனைத்துப் பேருந்துகளும் சேவையில் இருந்தாலும், தனியார் பேருந்துகளின் எண்ணிக்கையில் பெரும் பற்றாக்குறை நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், பேருந்துக் கட்டணத் திருத்தம் தொடர்பான யோசனை இன்று மாலை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அமைச்சரவை ஒப்புதல் அளித்தவுடன் புதிய கட்டண விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேருந்துக் கட்டணங்களை 10 சதவீதத்திற்கும் மேலாக உயர்த்த அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும், தொடக்கக் கட்டணம் முதல் அதிகபட்சக் கட்டணம் வரையிலான சுமார் 350 கட்டண நிலைகளை உள்ளடக்கிய புதிய கட்டணப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

