
மாபெரும் மோதல் : சென்னை சூப்பர் கிங்ஸ் VS மும்பை இந்தியன்ஸ் இன்று பலப்பரீட்சை
ஐபிஎல் தொடரின் ‘El Clasico’ என்றழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் இந்த சீசனில் இரண்டாவது முறையாக நடைபெறவுள்ளது.
குறித்த போட்டியானது இன்று சேப்பாக்கத்தில்இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
வான்கடேவில் கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி நடந்த போட்டியில் 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்திருந்தது சென்னை அணி
இந்நிலையில், இன்று சேப்பாக்கத்தில் இவ்விரு அணிகளும் மீண்டும் மோதுகின்றன.
இரண்டு அணிகளுக்குமே இந்தப் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது.
பிளே ஆப் சுற்றுக்கு எந்த சிக்கலும் இன்றி தகுதி பெற ஒரு அணிக்கு குறைந்தது 16 புள்ளிகளாவது தேவைப்படும் அந்தவகையில் சிஎஸ்கே அணிக்கு இன்னும் 6 லீக் போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன.
இதில் குறைந்தது 5 போட்டிகளிலாவது வெற்றி பெற்றால் மட்டுமே 16 புள்ளிகளை எட்டி பிளே ஆப் வாய்ப்பை சென்னை அணிக்கு தக்கவைக்க முடியும்.
இனி வரும் போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் தோற்றாலும் ரன் ரேட் அடிப்படையில் மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை சார்ந்திருக்க வேண்டிய மிக கடுமையான நெருக்கடி சென்னை அணிக்கு ஏற்படும்.
அதேபோல மும்பை இந்தியன்ஸ் அணியும் 8 போட்டிகளில் 2 வெற்றி மட்டுமே பெற்று 4 புள்ளிகளுடன் 9வது இடத்தில் தத்தளிக்கிறது.
இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்றால் அந்த அணியின் பிளே ஆப் வாய்ப்பு இழந்துவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது

