
டுபாய் Suddaவின் போதைப்பொருள் வலையமைப்பைச் சேர்ந்த 7 பேர் பண்டாரகமையில் 15 இலட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் கைது
பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான துபாய் சுத்தா (Dubai Sudda) என்பவரின் போதைப்பொருள் வலையமைப்பின், பண்டாரகம பிரதேசத்தின் பிரதான விநியோகஸ்தர் உட்பட 7 சந்தேகநபர்கள் பண்டாரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருட்களை பொதி செய்யும் இரகசிய இடமொன்றை சுற்றிவளைத்த போதே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
15 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 50 கிராம் ஹெரோயின், 25 கிராம் ஐஸ் போதைப்பொருள்,போதைப்பொருளை பொதி செய்ய பயன்படுத்தப்படும் விசேட காகிதங்கள் மற்றும் பொலித்தீன் உறைகள்,4 கைபேசிகள் என்பனவும் கைப்பற்றப்பட்டன.
அத்துடன் ஒரு கார் ,போதைப்பொருள் பொதி செய்வதற்கு பயன்படுத்தப்படும் ஏனைய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.
பண்டாரகம, வெல்மில்ல அலோதியாவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் தங்கியிருப்பதாக பண்டாரகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதம பொலிஸ் பரிசோதகர் சன்ன அமரசேகரவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
சந்தேநபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

