
UN கொடியுடன் பயணிக்கும் கடல் வள ஆராய்ச்சி கப்பல் Dr. Fridtjof Nansen, ஆய்வுகளை நிறைவு செய்து கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்டது
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மற்றும் நோர்வே அரசாங்கம் ஆகியவற்றின் கூட்டுத் திட்டத்தின் கீழ் (EAF-Nansen Programme), இலங்கையின் கடல் வளங்கள் மற்றும் கடல்சார் சூழல் குறித்து ஆழமான புரிதலைப் பெறுவதற்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் மீன் இருப்புக்கள், கடல் சுற்றுச்சூழல் மற்றும் கடல்சார் நிலைமைகள் குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்டன.
கடல் மட்டத்திலும் ஆழ்கடலிலும் வாழும் மீன் இனங்களின் எண்னிக்கை குறித்த மதிப்பீடு. கடல் நீரின் வெப்பநிலை, நீரோட்டம், ஊட்டச்சத்து மட்டங்கள் மற்றும் கரைந்துள்ள ஆக்சிஜன் அளவு ஆகியவற்றை அளவிடுதல்.
நுண்ணிய பிளாஸ்டிக் (Microplastics) உள்ளிட்ட கடல்சார் மாசடைதல் குறித்த ஆய்வு.
கடல் உணவுகளின் ஊட்டச்சத்து மற்றும் அவற்றில் அடங்கியுள்ள மாசுக்கள் குறித்த பகுப்பாய்வு.
கடல்வாழ் பாலூட்டிகள் (கடல் பசுக்கள், டொல்பின்கள் போன்றவை) குறித்த அவதானிப்புகள். குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்டன.
இந்தக் கப்பல் நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டதுடன், இலங்கை ஆராய்ச்சியாளர்களுக்கு நேரடிப் பயிற்சியையும் வழங்கியுள்ளது.
இது இலங்கையின் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையத்துடன் (NARA) இணைந்து முன்னெடுக்கப்பட்டது.
நேன்சன் (Nansen) திட்டத்தின் கீழ் இலங்கை கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட 5-வது அறிவியல் ஆய்வு இதுவாகும். இதற்கு முன்னர் 1978-1980 காலப்பகுதியிலும், மிக அண்மையாக 2018 ஆம் ஆண்டிலும் இத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வின் மூலம் பெறப்பட்ட முடிவுகள், இலங்கையின் எதிர்கால மீன்பிடி முகாமைத்துவ உத்திகளை வகுப்பதற்கும், சர்வதேச கடல் உணவுச் சந்தைகளுக்கான வாய்ப்புகளைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் கொடியுடன் பயணிக்கும் உலகின் ஒரே அறிவியல் ஆராய்ச்சி கப்பல் இதுவாகும் .

