ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைமை அதிகாரி கபில ,வீட்டின் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைமை அதிகாரி கபில ,வீட்டின் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரி கபில சந்திரசேன சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

கொழும்பு கொள்ளுப்பிட்டி, பேட்ரிஸ் மாவத்தையில் உள்ள அவரது வீட்டில் இன்று (08) காலை கபில சந்திரசேன சடலமாக மீட்கப்பட்டார்.

வீட்டின் அறையொன்றில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி மற்றும் கோட்டை நீதவான் பசந் அமரசேன ஆகியோர் வருகை தந்து முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.

கபில சந்திரசேனவின் மரணம் பல முக்கிய அரசியல் மற்றும் ஊழல் விசாரணைகள் நடந்து வரும் பின்னணியில் நிகழ்ந்துள்ளது,

2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏர்பஸ்களை கொள்வனவு செய்தபோது, 2 மில்லியன் அமெரிக்க டொலர் லஞ்சமாகப் பெற்றதாக கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பாக கடந்த மார்ச் 12 ஆம் திகதி அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இதன்போது, தமக்குக் கிடைத்த 2 மில்லியன் டொலர்களில் 20 மில்லியன் ரூபாயை அன்றைய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கும், 60 மில்லியன் ரூபாயை அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் வழங்கியதாக அவர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் வாக்குமூலம் அளித்திருந்தார்.

இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் பிரியங்கர ஜயரத்ன ஆகியோரை வரும் 12 ஆம் திகதி லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

சுமார் 54 நாட்கள் விளக்கமறியலில் இருந்த அவர், கடந்த மே 5 ஆம் திகதி கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

எனினும், பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யும்போது போலி உறவினர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இதன்காரணமாக, நீதிமன்றத்தை ஏமாற்றிய குற்றத்திற்காக அவரை மீண்டும் கைது செய்ய நேற்று (07) கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

இந்தச் சூழ்நிலையிலேயே இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )