
சடலமாக மீட்கப்பட்ட கபில சந்திரசேனவின் மரண பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மரண பரிசோதனை இன்று (09) நடைபெறவுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் கொள்ளுப்பிட்டி பொலிஸார் முன்வைத்த விடயங்களை கருத்திற்கொண்ட கோட்டை நீதவான் பசான் அமரசேன, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளரினால் நியமிக்கப்படும் 05 பேர் கொண்ட தடயவியல் மருத்துவக் குழுவின் மூலம் இந்த மரண பரிசோதனையை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், இது தொடர்பான அறிக்கையை எதிர்வரும் 12ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் சடலம், கொள்ளுப்பிட்டி பேட்ரிஸ் மாவத்தையில் அமைந்துள்ள அவரது வீட்டில் இருந்து நேற்று (08) காலை தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது .

